2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’UNFக்கே TNA ஆதரவு’

Editorial   / 2018 நவம்பர் 30 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி (UNF) தலைமையிலான அரசாங்கத்தை மீளமைப்பதற்கு ஆதரவளிப்தோடு, ஐ.தே.முவால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக்கூடியவரெனக் கருதும் நபரை, பிரதமராக நியமிக்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) கோரியுள்ளது.

இது தொடர்பில், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கைச்சாத்திட்டு, நேற்று (29), ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, மேற்கண்டவாறு கோரப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு எம்.பிக்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோரைத் தவிர்ந்த ஏனைய 14 எம்.பிக்களும் கைச்சாத்திட்டுள்ள அந்தக் கடிதத்தில், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியிலிருந்து நடந்த அனைத்துச் சம்பவங்களினதும் பின்னணியின் அடிப்படையில், மேற்குறித்த விடயம் தொர்டர்பாக இக்கடிதத்தை எழுதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியன்று, பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நியமிக்கப்பட்ட ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அந்தக் காலப்பகுதியில், பல தடவைகள் நாடாளுமன்றம் கூடியுள்ள போதிலும், அவரால், தனக்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை நம்பிக்கை உள்ளதென்பதை நிரூபித்துக் காட்ட முடியாத நிலையில் காணப்படுகிறாரெனக் குறிப்பிட்டுள்ள கூட்​டமைப்பினர், அதேவேளை, அவர், பிரதமராகப் பதவி வகிப்பதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள், நவம்பர் 14 மற்றும் 16ஆம் திகதிகளில், நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர்.

குரல் அடிப்படையில் எடுக்கப்பட்ட வாக்குகள், 122 உறுப்பினர்களின் கையொப்பங்களோடு, ஜனாதிபதி தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது மாத்திரமன்றி, இது தொடர்பான சபாநாயகரின் அறிக்கைகளும், தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் நினைவுபடுத்தியுள்ள கூட்டமைப்பு, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமராக இருப்பதற்கு, நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளாரா என்ற வினாவுக்கு, இல்லையென்பதே பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாக உள்ளதென்றும் அது மாத்திரமன்றி, சந்தேகத்துக்கு இடமில்லாமல் அது நிரூபிக்கப்பட்டும் உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளன.

எனவே, இந்த விடயத்தில் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புவதாக, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கூட்டமைப்பினர், அதில் ஒரு விடயமாக, பிரதமராகப் பதவி வகிப்பதற்குரிய நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை, குறித்த உறுப்பினர் பெற்றுள்ளார் என்பதை நிரூபித்துக்காட்டு இயலாது போயுள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், குறித்த உறுப்பினர், பிரதமராக இருப்பதற்கு எதிராக, நவம்பர் 14 மற்றும் 16ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களானவை, இந்நாட்டில், ஒரு பிரதமரோ அமைச்சரவையோ, சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட அரசாங்கமொன்றோ, இருக்கின்றதா என்ற முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளன என்றும் இந்த நிலைமை, தொடர்ந்தும் நீடிக்க முடியாதென்பதை, தாம் மிகவும் மரியாதையுடன் கூறிக்கொள்ள விரும்புவதாகவும், கூட்டமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

நான்காவது விடயமாக, நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே, பிரதமராக நியமிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய தாம், கடந்த 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐ.தே.மு தலைமையிலான அரசாங்கத்தை மீளமைப்பதற்கு ஆதரவளிப்தோடு, ஐ.தே.முவால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக்கூடியவரென நீங்கள் கருதும் நபரை, பிரதமராக நியமிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ள விரும்புவதாகவும் மேற்குறிப்பிட்ட விடயங்களை, தங்களுக்குத் தெரியப்படுத்துவது தமது கடமையெனக் கருதுவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .