2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அதிகபட்ச ஆதரவை வழங்க எதிர்பார்ப்பு

Freelancer   / 2023 மே 31 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தக் கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இன்று தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31) பிற்பகல் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு பல அடிப்படையான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை பாராட்டுவதாக கென்ஜி ஒகாமுரா தெரிவித்தார்.

இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்தமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா உள்ளிட்ட பணிப்பாளர்களுக்கு இந்நாட்டின் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக சபாநாயகர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரிடம் தெரிவித்தார்.

அதேபோன்று, தற்போதைய நெருக்கடியை தீர்க்க பொருளாதார ஸ்திரத்தன்மைக்குத் தேவையான கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டதாகவும் பாராளுமன்றம் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். 

மேலும், மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய புதிய பொருளாதாரப் நோக்குக்காக பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை அமைத்தல், ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகம் செய்தல், புதிய மத்திய வங்கிச் சட்டத்தை அறிமுகம் செய்தல் போன்ற பல சாதகமான  நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 பாராளுமன்றத்திற்கு இன்று பிற்பகல் வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுராவை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரியும் பிரதி செயலாளர் நாயகமுமான டிகிரி கே. ஜயதிலக்க, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன மற்றும் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பர்னாந்து ஆகியோர் வரவேற்றனர்.

சபாநாயகருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து கென்ஜி ஒகாமுரா அவர்கள் பாராளுமன்ற சபா மண்டபத்தைப் பார்வையிட்டார். 

அதனையடுத்து அவர் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கத்தவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.  

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா அவர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் விசேட விருந்தினர்களின் பதிவேட்டில் நினைவுக் குறிப்பை பதிவு செய்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, சபை முதல்வரும் அமைச்சருமான கௌரவ சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் அலி சப்ரி, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற செயலர்கள் குழு உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X