Freelancer / 2021 நவம்பர் 07 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
"விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல, ஒட்டு மொத்த அரசாங்கத்தையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்" என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் இன்று (07) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்று, விலையேற்றத்தைக் கண்டித்தனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பொகவந்தலாவை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
அங்கு மேலும் தெரிவித்த அவர்,
" கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தன. அந்நாடுகள் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யவில்லையா? அப்படியானால் எமது நாட்டு அரசுக்கு மட்டும் ஏன் தடுமாற்றம்?
தேசிய உற்பத்தியில் புரட்சி செய்யபோவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மஞ்சளுக்கு தடை விதிக்கப்பட்டது. நாட்டில் தற்போது மஞ்சள் இருக்கின்றதா? பாசிப் பயறு, உளுந்து உள்ளிட்ட பொருட்களும் இல்லை. அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.
எமது பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வேண்டும். யாரோ பெத்த பிள்ளைக்கு, யாரோ பெயர் வைப்பதுபோல தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு சிலர் இன்று பெயர் வைக்கின்றனர்" என்றார்.
மக்கள் எழுச்சி அவசியம்
மக்கள் எழுச்சி மூலமே இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க முடியும் என்று தெரிவித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், சஜித் பிரேமதாச தலைமையில் மக்களுக்கானதொரு அரசாங்கம் உருவாகும் என்று தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர்,
" பொய்யுரைத்து அதன்மூலம் ஆட்சியை முன்னெடுப்பதற்கே இந்த அரசாங்கம் முயல்கிறது. இன்று பொய் கூறுவதில் சிறப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளது.
நாட்டு மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். மக்கள் போராட்டங்கள்மூலமே இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க முடியும். சஜித் தலைமையில் மக்களுக்கு நன்மை பயக்கும் அரசொன்றை நாம் உருவாக்குவோம்.
சேதன பசளை திட்டத்தை ஒரே நாளில் செயற்படுத்தவிடமுடியாது. அதற்கு நீண்டகால திட்டம் வேண்டும். ஒரே தடவையில் செய்வதற்கு முற்பட்டதால்தான் இன்று விவசாயிகள் போராடுகின்றனர். இதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு உடனடியாக உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.
இந்த அரசாங்கம் வீழ்வது நிச்சயம்
இந்த அரசாங்கம் வீழ்வது நிச்சயம். அடுத்த தேர்தலில் சிறப்பானதோர் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர்,
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பளம் இன்னும் முறையாக, முழுமையாகக் கிடைக்கவில்லை. சம்பளப் பிரச்சினை ஒருபுறம். மறுபுறத்தில் விலையேற்றம் என்ற தாங்க முடியாத சுமை. சமையல் எரிவாயு, பால்மா மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன. இதனால் வாழ்க்கை சுமையும் அதிகரித்துள்ளது.
ஆசிரியர்கள், மின்சார சபை ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் என அனைவரும் இன்று வீதிக்கு இறங்கிவிட்டனர். யார் வேண்டுமானாலும் எப்படியும் பொருட்களை விற்கலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது. எது எப்படி இருந்தாலும் இந்த ஆட்சி வீழ்வது உறுதி. நல்லதோர் அரசாங்கத்தை உருவாக்க மக்கள் அடுத்த தேர்தலுக்கு தயாராக வேண்டும்" என்றார்.
19 minute ago
28 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
45 minute ago
2 hours ago