2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஆட்டிறைச்சி மாயம்: 4 பொலிஸாருக்கு இடமாற்றம்

Editorial   / 2024 ஜூலை 28 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பத்தினை அடுத்து 4  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு அட்டாளைச்சேனை  பகுதி வீடு ஒன்றில்  அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு கடந்த வெள்ளிக்கிழமை(26) அன்று வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்  விலங்குகள் அறுக்கும்    தொழுவத்தில் அறுக்கப்படாமல் அட்டாளைச்சேனை பகுதியில்  உள்ள ஒரு  வீட்டில் வைத்து 4 ஆடுகளை அறுத்த கடை உரிமையாளரை   பொலிஸார்  கைது செய்திருந்தனர்.

பின்னர் குறித்த சந்தேக நபர்  அக்கரைப்பற்று நீதிமன்றில்  ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். அவரது சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தனது குறித்த ஆட்டினை தனது வீட்டு நிகழ்வு ஒன்றிக்கு அறுத்திருந்தாகவும்  குற்றத்தினை ஏற்றுக் கொள்வதாகத்  தெரிவித்துள்ளார்.

 

குறித்த வழக்கின் சான்றுப் பொருளான ஆட்டிறைச்சி பொலிஸ் நிலையத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  நீதிமன்றிடம் தெரிவித்துள்ளனர்.

 

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு   குறித்த சான்றுப் பொருளை பார்வையிட    நீதிவான்   சென்ற வேளையில்  ஆட்டிறைச்சி  மூட்டையில் கட்டி  பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்க தயாராக  வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.


குறித்த சான்றுப் பொருள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே  கூறிய பொலிஸார்  திடீரென பெக்கோ இயந்திரத்தில் வைத்திருப்பது பாரிய சந்தேகத்தை நீதிவானுக்கு ஏற்படுத்தி இருந்தது.

 

யாரும் எதிர்பாராத வண்ணம் நீதவான்   பெக்கோவில் இருந்த ஆட்டிறைச்சி மூட்டையைப் பிரிக்குமாறு பணித்திருந்தார்.  அதன்போது  குறித்த  ஆட்டின் பின்னங்கால் மற்றும் சதைகள் யாவும் மாயமாக மறைந்திருந்தன.

 

குறித்த  ஆட்டிறைச்சியின் பின்னங்கால்கள் கூட  தொலைந்து போயிருந்தன. இது பற்றி வினவியபோது  ஆட்டிறைச்சியை சில பகுதிகளை  தேடுதலுக்குச் சென்ற  பொலிஸார்  எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.


இதனை அடுத்து  அக்கரைப்பற்று நீதிமன்ற  நீதவான் .சி.றிஸ்வான் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கடந்த வெள்ளிக் கிழமையன்று   விசாரணை நடத்துமாறு  உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 

இதன் அடிப்படையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய   ஆட்டிறைச்சியைக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு எதிராக  அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை மேற்கொண்டு அதனடிப்படையில்  குறித்த ஆட்டிறைச்சியை கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடி இடமாற்றம் வழங்கபட்டுள்ளது.

இதன் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள  இறக்காமம் பொலிஸ் நிலையத்திற்கும்  ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிந்தவூருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X