2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘ஆவணங்கள் எதுவும் இன்றியே ஷஷிக்கு ஐ.டீ கொடுத்தோம்’

Kogilavani   / 2017 ஜூன் 23 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரசன்சவுக்கு, ஒருநாள் சேவையினூடாக அடையாள அட்டையைப் (ஐ.டீ) பெற்றுக்கொடுக்குமாறும், அது தொடர்பான ஆவணங்கள் பின்னர் தரப்படும் என, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இந்திக குமார லியனகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (22) சாட்சியமளித்தார்.  

ஷஷி வீரவன்ச, போலிப் பெயர் மற்றும் போலியான பிறந்த தினத்தைக் கொண்டு இரண்டு அடையாள அட்டைகளை எடுத்துள்ளமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன், அவற்றைக் கொண்டு இராஜதந்திர மற்றும் சாதாரண கடவுச்சீட்டுகளைப் பெற்ற குற்றச்சாட்டுத் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தொடரப்பட்டது.  

ரணசிங்ககே ரண்முத்து முதியன்சலாகே ஷேஹசா உதயகாந்தி மற்றும் ரணசிங்ககே ரண்முத்து முதியன்சலாகே ஷிர்ஷா உதயகாந்தி ரணசிங்க ஆகிய பெயர்களில் இரண்டு கடவுச்சீட்டுகள் பெறப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.  

இந்த வழக்கு, பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில், நேற்று (22) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வழக்கின் ஏழாவது சாட்சியாளரான, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இந்திக குமார லியனகேவிடம், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கேள்விகளைக் கேட்டார். அதற்குப் பதிலளிகையிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.  

அடையாள அட்டை தொலைந்த காரணத்தால், மீண்டும் அதைப் பெறுவதற்கு கோரப்பட்டதாகவும் வீடு மாறும்போது தொலைந்ததாகக் காரணம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் சாட்சியமளித்தார்.  

பத்தரமுல்லையிலுள்ள வீட்டிலிருந்து கொழும்பு 7இலுள்ள வீட்டுக்கு மாறும்போது, கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பன தொலைந்துள்ளன என, கறுவாத்தோட்டம் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணம் பின்னர் தமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 2012.11.1அன்று விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டை தொடர்பான ஆவணங்களில் 2015.3.21ஆம் திகதிய முத்திரை பொறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வினவினார்.  

அதற்குப் பதிலளித்த சாட்சியாளர், ஒரு நாள் சேவையில் வழங்கப்படும் அடையாள அட்டை தொடர்பான ஆவணங்கள், வாகனம் மூலம், அன்றைய தினமே நுகேகொடையிலுள்ள தமது அலுவலகத்துக்கு அனுப்படும் எனத் தெரிவித்த அவர், தபால் மூலம் அனுப்பப்ட்ட ஆவணங்களுக்கே முத்திரை பொறிக்கப்படும் எனவும் அந்த ஆவணங்கள் தபாலில் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.  

விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரசன்சவுக்கு, ஒருநாள் சேவையினூடாக அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுக்குமாறும், அது தொடர்பான ஆவணங்கள் பின்னர் தரப்படும் என, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது எனவும் அதன் அடிப்படையிலேயே அடையாள அட்டை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.  

விமல் வீரவன்சவின் மகனான விபோதி வீரவன்ச மற்றும் மகள் ஆகியோரின் அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களும் மன்றில் சோதிக்கப்பட்டதுடன், மகனின் அடையாள அட்டைக்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழில் தந்தையான விமல் வீரவன்சவின் பிறந்த ஆண்டும் தாயின் பெயரும் பிறந்த ஆண்டும் திருத்தப்பட்டுள்ளமை மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.  அவர்களின் மகளின் பிறப்புச்சான்றிதழில், தாயின் பிறந்த ஆண்டு மீண்டும் திருத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், முறைப்பாட்டாளரின் கேள்விகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.  

பிரதிவாதியின் தரப்பில் குறுக்குக் கேள்விகளைக் கேட்பதற்கு அவகாசம் கோரியமைக்கு அமைய ஜூலை 31ஆம் திகதிக்கு திகதி குறிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .