2025 ஜூலை 16, புதன்கிழமை

’ஆவாவை ஒழிக்க இராணுவம் தேவையில்லை’

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் செயற்பட்டுவரும் ஆவா குழுவின் செயற்பாடுகளைக் ஒழிப்பதற்கு இராணுவத்தின் தலையீடு, எந்த வகையிலும் தேவைப்படவில்லை எனத் தெரிவித்துள்ள சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பொலிஸாராலேயே அக்குழுவை ஒழிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

வடக்கில் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கம் அனுமதியளிக்குமானால், இராணுவம் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயார் என்று, இராணுவப் பேச்சாளர் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"இராணுவத் தளபதியின் கருத்துகளை நான் பார்த்தேன். நாட்டில், இராணுவச் சட்டத்தைக் கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை. இவ்விடயம் தொடர்பாக இராணுவத் தளபதியின் கருத்து, முற்றுமுழுதாகப் பொருத்தமற்றது என நான் நினைக்கிறேன்.

"இராணுவத்தை நாங்கள் பயன்படுத்தினால், உலகத்துக்குத் தவறான செய்தியொன்றை நாம் அனுப்புவோம்" என்று அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் ஆயுதக் குழுக்களால் ஏற்படும் பிரச்சினைகள், மேலும் மோசமடையாமல், அரசாங்கம் கட்டுப்படுத்துமெனவும் அவர் தெரிவித்தார்.

வடக்குக்கான விஜயத்தை, அண்மையில் மேற்கொண்டிருந்ததாகத் தெரிவித்த அமைச்சர், ஆவா குழுவில் இடம்பெற்றிருப்போர், 16 தொடக்கம் 20 வயதுகளுக்கு இடைப்பட்டோர் எனவும், தென்னிந்தியத் திரைப்படங்களால் இவர்கள் தூண்டப்பட்டவர்கள் எனவும் தெரிவித்தார்.

ஆவா குழுவின் நடவடிக்கை, வடக்கிலுள்ள 53 பொலிஸ் நிலையங்களில், 5 பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாத்திரம் காணப்படுகிறது எனத் தெரிவித்த அமைச்சர், அக்குழுவால் கொலைகள் ஏதும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும், தாக்குதல் சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன எனவும் தெரிவித்தார்.

ஆனாலும், இவ்வாறான நடவடிக்கைகளை, தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்ட அவர், விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், இப்பிரச்சினைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X