2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஆஸி செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 38 பேர் கைது:பலர் தப்பியோட்டம்

George   / 2016 ஜூன் 03 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற சுமார் 38 இலங்கை அகதிகளை கைதுசெய்ததாக தமிழக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் 5  அகதிகள், தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் 15பேர், பொலிஸாரிடம் சிக்காமல் தப்பி விட்டதாகவும் இது தொடர்பில் தமிழக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இந்ததிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாம்களில் இருந்து 20 இலங்கை தமிழ் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக ஒரு சிலர் அவர்களை காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வரவழைத்துள்ளனர்.

இவர்களில் 10 பேரை திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பெருமாள்சேரி என்ற இடத்தில் தங்க வைத்தனர். மேலும் 10 பேரை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

தங்களை மாமல்லபுரத்தில் இருந்து படகுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாகவும், தாங்கள் அழைக்கும்போது வர வேண்டும் எனறும் இவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை தமிழ் அகதிகள் பெருமாள்சேரி கிராமத்தில் தங்கி இருப்பது தொடர்பாக மாமல்லபுரம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், குறிப்பிட்ட சில வீடுகளை சோதனையிட்டனர்.
பொலிஸார் வருவதை அறிந்த 5 அகதிகள் தப்பிவிட்டனர். கௌரிதரன்(26), ஜீவிதன்(18), ஜெயசுந்தர்ராஜன்(45), சசிதரன்(34), பிரதீபன்(29) என 5 பேர் மட்டும் சிக்கினர்.

இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு திறந்தவெளி அகதிகள் முகாம்களில் இருந்து இங்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதேவேளை, பழவேற்காட்டில் இருந்து கப்பல் மூலம் அவுஸ்திரேலியாவுக்க செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 28 பேரிடம் கியூ பிரிவு பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி, புழல், வேலூர் பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து  இலங்கை அகதிகள் சிலர், அவுஸ்திரேலியா செல்ல முயல்வதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, பொன்னேரி-பழவேற்காடு வீதியில் போலாட்சியம்மன் குளம் பகுதியில் அமைந்துள்ள வாகன சோதனைச் சாவடியில் திருப்பாலாவனம் பொலிஸார், புதன்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த வானை மடக்கி சோதனையிட்டனர். அப்போது வானில் 18 பேர் இருந்துள்ளனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டி, வேலூர், பவானிசாகர் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் எனத் தெரிய வந்தது.

மேலும், அனைவரும் பழவேற்காடு சென்று அங்கிருந்து கப்பல் மூலம் அவுஸ்திரேலியா செல்லவிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அகதிகளை ஏற்றிவந்த வானை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், அதில் இருந்த அகதிகளை திருப்பாலைவனம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பச்சத்திரம் கூட்டுச் சாலை சந்திப்பில் சோழவரம் பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த வானை மடக்கி சோதனையிட்ட போது வேலூர், புழல் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் 10பேர் அதில் பயணம் செல்வது தெரிந்தது.

இதையடுத்து, வானை கைப்பற்றிய பொலிஸார், அதில் இருந்த  அகதிகளை சோழவரம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் பொலிஸாரின், வாகன சோதனையில் சிக்காமல் இலங்கை அகதிகள் சிலர்   பழவேற்காடு பகுதிக்கு  2 வாகனங்களில் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பழவேற்காடு பகுதியில் முகாமிட்டு பொலிஸார் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளிடம் அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களிடம் பெருமளவில் பணம் பறிக்கும் இடைத்தரர்கள் கும்பல்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றனர்.

இதுபோல் இவர்களிடம் பணம் பறித்துக் கொண்டு ஏதாவது ஒரு படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி அனுப்பி விடுகிவின்றனர். பல சமயங்களில் இந்த படகுகள் குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்ல முடியாமல் அதிக எடை காரணமாக  விபத்தில் சிக்கும் அபாயங்கள் ஏற்படுகின்றன.

மேலும் ஏதேனும் ஒரு மணல் திட்டு பகுதியில் இவர்களை இறக்கிவிட்டுச் செல்லும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இவைகளை மீறி வெளிநாடுகளுக்குச் செல்லும் அகதிகள் பலர் உரிய அனுமதி இல்லாமல் சென்று அங்குள்ள பொலிஸாரின்; நடவடிக்கைகளுக்கும் ஆளாகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .