Freelancer / 2026 ஜனவரி 05 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கீதபொன்கலன்
திருகோணமலை, கன்னியா பிள்ளையார் கோயில் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியோடு வழக்கிலே இணங்கிக் கொண்டதற்கு மாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், அதனை நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தவுள்ளதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கன்னியா வெந்நீரூற்று பகுதிக்கு நேற்று (04) விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில வருடங்களுக்கு முன்னர் கன்னியா வெந்நீரூற்றில் இருந்த 150 வருடங்களுக்கு மேல் பழமையான பிள்ளையார் கோயிலை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அது தொல்லியல் திணைக்களதத்தால் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் எதுவும் செய்ய முடியாது எனத் தடுக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்தப் பகுதியிலே பௌத்த கொடி நடப்பட்டு பௌத்த விகாரை அமைப்பதற்கான பணி முன்னெடுக்கப்பட்டு வந்த வேளையில் குறித்த பிள்ளையார் கோயில் தர்மகர்த்தாவான கோகிலரமணி என்பவரால் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் நான் முன்னிலையாகி குறித்த கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை உத்தரவையும் பெற்றிருந்தேன்.
இறுதியிலே தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் இது சம்பந்தமாக நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியபோது அதில் பண்டைய விகாரை ஒன்று இருந்தது என்றும், அதற்குரிய ஆதாரங்களும் நீதிமன்றத்துக்குக் காண்பிக்கப்பட்டது.
இதேவேளை 150 வருடங்களுக்கு மேலாக அவ்விடத்தில் பிள்ளையார் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களும் எம்மால் நீதிமன்றத்துக்குக் காண்பிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டது. பண்டைய விகாரை அங்கே இருந்திருந்தால் அதனைப் பேணிப் பாதுகாக்கின்ற பொறுப்பு தொல்லியல் திணைக்களத்துக்கு இருக்கின்றது. ஆனால் மீள் கட்டுமானங்கள் எவையும் செய்ய முடியாது.
இதேவேளை 150 வருடங்களுக்கு மேலாக அவ்விடத்தில் பிள்ளையார் கோயில் இருந்ததன் காரணமாக அந்த இடத்திலேயே இன்னுமொரு இடம் அளவீடு செய்து அடையாளப்படுத்தப்பட்டு அதிலே பிள்ளையார் கோயிலை மீளவும் கட்டலாம் என நீதிமன்றத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டு குறித்த வழக்கு முடிவுறுத்தப்பட்டது.
அந்த இணக்கப்பாட்டுக்கு மாறாக இப்போது சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதான சில முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இது தொடர்பில் காணி உரிமையாளரான கோகிலரமணி அம்மா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றார். அத்துடன் வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக இருந்த அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு அளித்திருக்கின்றார்.
நானும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனுடன் சென்று அதனைப் பார்வையிட்டிருந்தேன். பண்டைய விகாரை இருந்ததாகச் சொல்லப்படுகின்ற அந்த மேட்டிலே அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு மேலதிகமாக வேறு சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தென்படுகின்றன. இது நீதிமன்றத்தில் இணங்கிய இணக்கப்பாட்டுக்கு மாறாக தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியோடு இது நடைபெறுவது போன்று தென்படுவதன் காரணத்தால் உடனடியாக நீதிமன்றத்துக்கு இதனைத் தெரியப்படுத்துவது என்று தீர்மானத்தை எடுத்துள்ளோம். இது தொடர்பாக காணி உரிமையாளரான கோகிலரமணி அம்மாவுடன் பேசியிருக்கின்றோம். இந்த வழக்கில் பதிவு பெற்ற சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமாரும் சமூகமாகியிருந்தார் என்றார். (a)
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago