2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இந்திய மீனவர்களின் 115 படகுகளை விடுவிக்கவும்

George   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மற்றும் புதுவை மீனவர்களின் 115 படகுகள் மற்றும் 5 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்' என்று தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா. இளங்கோ, சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இந்திய ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையில் நடைபெற்ற உலக மீனவர் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது கடல் மற்றும் கடற்கரையை மீனவர்களிடம் இருந்து அபகரிப்பதை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், இலங்கையில் உள்ள அரசு தரப்பினர் மற்றும் மீனவத் தலைவர்களிடம் இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பேசினோம். 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தமிழக, புதுவை முதல்வர்கள் மற்றும் இந்திய அரசு, வெளியுறவுத்துறையால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் எனவும், அதில் சுமூக முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய மீனவர்களின் 115 படகுகள் இலங்கையிடம் உள்ளன.

மழை காலம் தொடங்கினால் அந்த படகுகள் சேதமடையும். அவற்றின் மொத்த மதிப்பு இந்திய ரூ. 70 கோடி ஆகும். எனவே பேச்சுவார்த்தைக்கு முன்பே படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்.

கடல் மற்றும் கடற்கரை அபகரிப்புக்கு எதிராக உலக மீன்வளத் தினமான நவம்பர் 21ஆம் திகதி டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்.

புதுவையில் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள மீனவர் ஓய்வூதியம் மற்றும் மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் நவம்பர் மாதத்தில் தருவதாக முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார். ஜனவரி மாதத்தில் இருந்து வீடு தேடி பணம் வழங்கப்படும்.

மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா செயற்படுத்தியுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் மக்களுக்கும் மீனவர்களுக்கும் சிறப்பான சேவையை அளிக்க வாழ்த்துகிறேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .