2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இந்தியாவுடன் சீபா இல்லை:பிரதமர்

Kogilavani   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கையில் (சீபா) இந்தியாவுடன் கையெழுத்திடப் போவதில்லை என்றும் அந்த சீபா தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்பவேண்டாம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று, புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கம், பிறிதொரு பெயரில் இந்தியாவுடன் சீபா உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ளதாக வெளியாகியுள்ள கருத்துக்களில் எவ்விதமான உண்மையும் இல்லை. அவ்வாறான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபடாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சீபாவுக்கு பதிலாக பிறிதொரு பெயரில் அரசாங்கம், இந்தியாவுடன் சீபா உடன்படிக்கையில்  கைச்சாத்திடவுள்ளதாகவும், இதனூடாக வேலையற்ற இந்திய இளைஞர்களுக்கு இலங்கையில் பணிபுரிய வாய்ப்புகள் கிட்டவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அது தவறான கூற்றாகும் என்று தெரிவித்த பிரதமர்,  ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தை மாற்ற, பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவைக் களமிறங்கிய போது, பல்வேறு தொழிற் சங்கங்கள், தமது தொழில் வாய்ப்புக்கள் மட்டுமன்றி உயிரையும் பணயம் வைத்து எம்முடன் கைகோர்த்தனர், வைத்தியர்கள் பலரும் எம்முடன் இணைந்தனர் என்றார்.

எனினும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த பலர், ஜனவரி 8ஆம் திகதி புரட்சியுடன் இணைந்திருக்கவில்லை எனவும், அவ்வாறானவர்கள் ராஜபக்ஷ ஆட்சியைப் பாதுகாக்கவே இணைந்திருந்தாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தொழிற்சங்கங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள், பல்வேறான பொய்களை கூறி தமது உறுப்பினர்களையும், நாட்டையும் ஏமாற்றுவதற்கு முயல்கின்றனர். ராஜபக்ஷ ஆட்சியின் அடிமைகளாக இருப்பதாலேயே அவர்கள் இவ்வாறு முயற்சிக்கின்றனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொறுப்பு மிக்க தொழிற்சங்கமாகும். அச்சங்கம், பொய்யான மற்றும் ஆதாரமற்ற கருத்துக்களை கூறி, தமது உறுப்பினர்களையும் மக்களையும் ஏமாற்றுவதைக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X