2026 ஜனவரி 05, திங்கட்கிழமை

இந்தூர் குடிநீரில் கழிவு நீர் கலப்பு: இறப்பு அதிகரிப்பா?

Editorial   / 2026 ஜனவரி 04 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் தண்ணீர் மாசுபாட்டால் 10க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் விவகாரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கையில் மாறுபாடு நிலவுவதாக புகார் உள்ளது. அரசு அதிகாரபூர்வ அறிவிப்பில் 5 உயிரிழப்புகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அங்கு 15 உயிரிழந்திருப்பதாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இந்தூர் நகரம் உள்ளது. இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூர் இருக்கிறது. அந்தப் பகுதி மக்கள் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி திடீர் வாந்தி, வயிற்று போக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குடிநீரில், கழிவு நீர் கலந்ததால் தான் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 1,000க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியப்பிரதேசம் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக மத்தியப்பிரதேச அரசு, இந்தூர் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி தலைவர் ஆகியோரை பணி நீக்கம் செய்துள்ளனர்.

மேலும் சில அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் உமாபாரதி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் அவர்கள் அரசை கண்டித்து வருகிறார்கள். இது மாநில அரசுக்கு அவமானம் என்று உமாபாரதி கூறியுள்ளார். மத்தியப்பிரதேசம் மாநிலம் முதல்வர் மோகன் யாதவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடிகள் சூழ்ந்து வருகின்றன.

இதுதொடர்பாக நேற்று இரவு மோகன் யாதவ் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவித்தனர். இந்நிலையில் இந்தூர் சம்பவத்திற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மத்தியப்பிரதேச காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முக்கியமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது.

இந்த சம்பவம் குறித்து மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்தில், அந்த மாநில அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், "இந்தூர் பகிரத்புரா பகுதியில் தண்ணீர் மாசு பிரச்சனையால் 4 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்." என்று கூறியுள்ளனர். பிறகு மாவட்ட ஆட்சியர் சிவம் வெர்மா, "பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது" என்று கூறினார்.

இதுகுறித்து சிவம் வெர்மா மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையை தான் நாங்கள் வெளியிட்டு வருகிறோம். மூத்த மருத்துவர் தலைமையில் குழு அமைத்து அவர்கள் உறுதி செய்யும் தகவலைத்தான் அதிகாரபூர்வமாக பகிர்கிறோம். என்று கூறினார். ஆனால் இந்தூர் மேயர் புஷ்யமித்ரா பார்கவ், "இந்த பிரச்சனையால் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வந்தது" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்தியப்பிரதேசம் மகளிர் காங்கிரஸ் தலைவர் ரீனா பௌரசி, "இந்த சம்பவத்திற்கு உண்மை காரணமானவர்களை அரசு காப்பாற்றுகிறது. அதற்கு பதிலாக அதிகாரிகள் மீது மட்டும் சம்பிரதாயத்திற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள். 15 பேர் உயிரிழப்பின் மூல காரணமான இருக்கும் குற்றவாளிகளை அரசு பாதுகாக்கிறது. அதுவும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தை பேசிய பிறகு தான் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

ஆளுங்கட்சியின் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், மேயர் ஆகியோர் சொன்னதையே கூட காது கொடுத்து கேட்கவில்லை. ஒரு அதிகாரியை பணியிடை மாற்றம் செய்வதை மட்டுமே பொறுப்பேற்று கொள்வதாக ஏற்க முடியாது. பணியிடை மாற்றம் என்பது நிர்வாக நடைமுறை தான். அதை தண்டனையாக கருத முடியாது." என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .