2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இலங்கை - ஜேர்மன் கூட்டுறவு: 14 மில். யூரோ உதவி; 3 ஒப்பந்தங்கள்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் ஜேர்மனிக்குமிடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் ஜேர்மனியின் உதவியினூடாக இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கும் இலங்கையும் ஜேர்மனியும் இணக்கம் தெரிவித்துள்ளன. 

இதன்போது, 14 மில்லியன் யூரோவை இலங்கைக்கு உதவியாக வழங்க, ஜேர்மன் முன்வந்துள்ளது. இதில் 13 மில்லியன் யூரோ, தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மற்றும் இவ்வாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்களுக்கான தொழில்நுட்பக் கூட்டுறவுக்காக வழங்கப்படவுள்ளது.

இதற்குள், வில்பத்துவில் தேசியப் பூங்காக்கள், தாங்கு மண்டலம் ஆகியவற்றுக்கான உதவியாக வழங்கப்படவுள்ள 6 மில்லியன் யூரோ, வடக்கு, கிழக்கில் தொழிற்பயிற்சிகளுக்காக 4 மில்லியன் யூரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்திக்காக 2.4 மில்லியன் யூரோ, சமூக ஒருமைப்பாட்டுக்காக 0.6 மில்லியன் யூரோ ஆகியன உள்ளடங்குகின்றன.

இவற்றுக்கு மேலதிகமாக, 1 மில்லியன் யூரோ விசேட மானியமும் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கல்வி, மொழி, அருங்காட்சியகம், மரபுரிமைகள், கலை பாதுகாப்பு, உயர்கல்வி மற்றும் விளையாட்டு, இரு நாடுகளுக்கிடையேயான உயர்கல்வி முறைமைகள் தொடர்பான தகவல்களுக்கான வழிகளை மேம்படுத்துதல், இரண்டு தரப்புகளிலும் கல்வித்துறை பரிமாற்றத்தை ஊக்குவித்தல், பல்கலைக்கழகங்களுக்கிடையே இணைந்த கருத்திட்ட பங்குடமைகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கும் விரிவான கூட்டுறவு உடன்டிபடிக்கைகளில் இரண்டு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன. 

இந்த உடன்படிக்கைகளில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் கருணாதிலக அமுனுகம ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். 

உடன்படிக்கைகள் விவரம்

01.    கலாசார உறவுகள் மற்றும் கல்விக்கொள்கை தொடர்பான கூட்டுறவு குறித்த இணைந்த பிரகடனம். இது கல்வி, மொழி, அருங்காட்சியகம், மரபுரிமைகள் மற்றும் கலை பாதுகாப்பு, உயர்கல்வி, விளையாட்டு போன்ற துறைகளை உள்ளடக்கியுள்ளது. 

02. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் ஜேர்மன் கல்வித்துறை பரிமாற்றச் சேவைக்கும் இடையிலான கல்வித்துறை கூட்டுறவு குறித்த புரிந்துணர்வு  உடன்படிக்கை.

இது இரு நாடுகளிலும் உயர்கல்வி முறைமைகள் தொடர்பான தகவல் வழிகளை மேம்படுத்துதல், இரு தரப்புகளிலும் கல்வித்துறை பரிமாற்றத்தை ஊக்குவித்தல், இணைந்த கருத்திட்டங்களை அதிகரித்தல், பல்கலைக்கழக்களுக்கிடையிலான பங்குடமை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 

03. ஹில்டபேர்க் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை.  

ஜேர்மனியின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹில்டபேர்க் பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் பேராசிரியர்கள் மற்றும் இலங்கை பேராசிரியர்களின் பரிமாற்றத்தை உள்ளடக்கியதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X