2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

’உள்ளகப் பொறிமுறையை ஒருபோதும் ஏற்கோம்’

Freelancer   / 2025 செப்டெம்பர் 12 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளகப் பொறிமுறையை ஒருபோதும் தாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இந்த விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளும் என்று நம்புகின்றோம் என்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற தேசிய கணக்காய்வு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐநா தீர்மானம் மிக இறுக்கமாகியுள்ளது. எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயத்தை கோரும் வகையில் ஐநா தீர்மானம் மிகவும் வலுவாக இருக்கும் நிலைமையில், வெளிவிவகார அமைச்சர் உள்ளக பொறிமுறையில் மனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களை கையாளப் போவதாக கூறுகின்றார். அது எப்படி சுடச் சொன்னவரை காப்பாற்றிவிட்டு சுட்டவரை விசாரிப்பதா? களவெடுக்க சொன்னவனை விட்டுவிட்டு களவெடுத்தவனை விசாரிப்பதா? எங்களை பொறுத்தவரையில் உள்ளக விசாரணைகளை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். சர்வதேச கண்காணிப்புடன் விசாரணைகள் நடக்க வேண்டும். அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளும் என்று நம்புகின்றோம்.

கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் இந்த அரசாங்கத்தின் ஒரு அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த காலங்களில் போராட்டத்தை நசுக்கிய போராட்டத்தில் மக்களை கொன்று குவித்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதே பிரதான நோக்கமாகும். இதனால் இந்த விடயத்தில் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதேவேளை மனித உரிமை மீறல் தொடர்பில் இந்தியா தனது கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளது. இதனை பாராட்டுகின்றோம். மாகாண சபை முறைமை அரசியல் ரீதியிலான அதிகார பரவலாக்கலை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதனை வரவேற்கின்றோம் என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X