2025 ஒக்டோபர் 24, வெள்ளிக்கிழமை

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

Editorial   / 2025 ஒக்டோபர் 24 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை  ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை.போதைப்பொருள்  பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

‘போதைப்பொருள் பேரழிவை  வேரோடு ஒழிப்பதற்கான '' முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு’ குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் வியாழக்கிழமை(23) பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தற்போது தேசிய பேரழிவாக மாறி இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை  மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வரும்  போதைப் பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு அநேகமான குற்றங்கள் நடப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய  மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மட்டுமன்றி பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின்  ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை  முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த தேசிய நோக்கத்தை அடைவதற்காக , ''முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு'  முன்னெடுக்கப்படுவதோடு பரந்தளவிலான பிரச்சார செயல்முறையின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து சமூகத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாரிய திட்டமொன்றாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரச்சார திட்டத்தை செயல்படுத்துவதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பு குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களின் நிதி பலம் என்பன பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரச பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட  வீழ்ச்சியடையச் செய்து  நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதாகத் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் இந்த அச்சுறுத்தலுக்கு இனிமேலும் இடமளிப்பதில்லையென முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் அரசியல்  நிழலின் கீழ் சுதந்திரமாக வளர்ந்த இந்தக் குற்றங்கள், தற்போது நாட்டையும் சமூகத்தையும் கடுமையாக ஆக்கிரமித்துள்ளது என்பதையும், அதற்கு பொலிஸ், சுங்கம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

மீண்டும்  இவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு எதிர்கால சந்ததியினருக்காக  இந்த தேசிய பேரழிவைத் தோற்கடிப்பதற்கு  அனைவர்  மீதும் சுமத்தப்பட்டுள்ள மறுக்க முடியாத பொறுப்பை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு  எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஆகியோருடன் அரச மற்றும் தனியார் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொழுதுபோக்கு துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X