2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

இந்திய-இலங்கை இணைப்பில் ’’கல்லி’’

Editorial   / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய-இலங்கை இணைப்பில் "கல்லி" தமிழ்த் திரைப்பட பூஜை கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது

ஆர்.கே.ஆர் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், இந்திய இளம் இயக்குனர் ஷர்வின் இயக்கத்தில், இலங்கை கலைஞர்களின் கணிசமான பங்களிப்புடன் தயாராகவிருக்கும் "கல்லி" (Gully) என்ற தமிழ்த் திரைப்படத்தின் ஆரம்ப பூஜை கொழும்பு, சங்கமித்தை மாவத்தையில் அமைந்துள்ள SR தனியார் கட்டிட வரவேற்பு மண்டபத்தில் திங்கட்கிழமை (20) மாலை சிறப்பாக நடைபெற்றது.

இப்பூஜை சம்பிரதாயம் "சிவஸ்ரீ கனக கிருஷ்ணநாதக் குருக்கள்" தலைமையில் நடைபெற்றதுடன் ஏராளமான இலங்கையின் மூத்த கலைஞர்கள் மற்றும் இளம் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.



பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனரின் மகன் ஷர்வின் இத்திரைப்படத்தை கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இத்திரைப்படத்தின் இயக்குனர் ஷர்வினின் அன்னையும், தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையுமான மீரா சுரேஷ், திரைப்படத்தின் தலைப்புப் பதாகையை உத்தியோகபூர்வமாக திரை நீக்கம் செய்து வெளியிட்டு வைத்தார்.


பிரபல தொழிலதிபரும் கலைஞருமான "கெவின் ராகுல்" இப்படத்தின் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

திரைப்பட பூஜையைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் "கெவின் ராகுல்" கருத்து தெரிவிக்கையில், "இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்கவும், குறுகிய காலத்திற்குள் திரையரங்குகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் எமது நாட்டுக் கலைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதே எனது முதல் நோக்கம். மேலும், என்னால் முடிந்தளவு சேவையை இலங்கை சினிமாவுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளேன்" என்றார்.



தொடர்ந்து இயக்குனர் ஷர்வினும், இந்திய படத்தொகுப்பாளர் ஸ்வர்ண ரேகாவும் கருத்து தெரிவித்தனர். இயக்குனர் ஷர்வின், "இந்திய சினிமா நுட்பங்களையும், அனுபவத்தையும் இணைத்து, இலங்கையின் திறமைவாய்ந்த கலைஞர்களுடன் இந்தத் திரைப்படத்தை சிறப்பாகத் தரக் காத்திருப்போம்" என்றார். படத்தொகுப்பாளர் ஸ்வர்ண ரேகா, இரு நாடுகளின் சினிமா பாணிகளையும் இணைத்து ரசிகர்களை கவரும் வகையில் படத்தை அமைப்பது குறித்து தெரிவித்தார்.

திரைப்படத்தின் முக்கிய சிறப்பம்சம், இலங்கையின் முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினராக பல்வேறு திறமை வாய்ந்த இலங்கை கலைஞர்கள் பணியாற்றுவதாகும்.



இத்திரைப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவாக பின்வரும் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்...

· நடிகர்கள்: கெவின் ராகுல், ஜனா ஆர்.ஜே, நிஷாந்தன் ஆர்.கே, இஃபாம், அமல் பாண்டியன், ஷப்ரான்
· இயக்கம்: ஷர்வின்
· தயாரிப்பு: கெவின் ராகுல்
· ஒளிப்பதிவு: தேவ் கிரிஸ்
· படத்தொகுப்பு: ஸ்வர்ண ரேகா (இந்தியா)
· கலை இயக்கம்: ஹர்ஷ பெரேரா
· சண்டை இயக்குனர்: கௌஷல்ய நிர்மான
· உதவி இயக்குநர்கள்: பிராதபன், இஃபாம், அப்துல் பாஷித், ஹர்ஷன்யா, நிஷா
· தயாரிப்பு நிர்வாகம்: ஜனா ஆர்.ஜே, ஷனோ, துஷாந்தினி, ரங்கேஷ்

இத்திரைப்படத்தின் பணிகள் விரைவான கட்டமாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு இலங்கை ரசிகர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் வாழும் தமிழ் சினிமா இரசிகர்களுக்கும் இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .