2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளருக்கு திறந்த பிடியாணை

Editorial   / 2025 ஜனவரி 22 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான  நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிமன்றில் ஆஜராகியிருந்த சந்தேக நபர்கள் 27 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க   2023 ஒக்டோபர் 8 ஆம் திகதி வருகை தந்தார்.

அப்போது போது, கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற  குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இரண்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபர்கள் என குறிப்பிட்டு ஏறாவூர் பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற  நீதவான்  மதுஜலா கேதீஸ்வரன்  முன்னிலையில் இந்த வழக்கு புதன்கிழமை (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பாராளுமன்ற அமர்வு காரணமாக நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என நீதிவானின் கவனத்திற்கு சட்டத்தரணியால் கொண்டுவரப்பட்டது.இதேபோன்று ஏற்கனவே நீதிமன்றுக்கு சமூகமளிக்காத நிலையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன்,வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனுக்கு திறந்த பிடியாணை பிறக்கப்பட்டதுடன் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், நீதிமன்றில் முன்னிலை ஆகியிருந்த   27பேருக்கும் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்கும் நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதித்தார்.

அத்துடன் குறித்த வழக்கு ஏப்ரல் 21க்கு ஒத்திவைக்கப்பட்டது.   வழக்கில் தொடர்புடைய 30 பேரில் இருவர்  மன்றுக்கு சமூகமளிக்காமையினால் அடுத்த வழக்கில்  தொடர்புடைய அனைவரையும் ஆஜராகும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஷ்ணா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X