2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

எனக்கு ஞாபகமே இல்லை: துமிந்த

Kanagaraj   / 2016 மே 05 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலையோ, 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலோ, தனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை என்று தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இந்த வழக்கிலிருந்த தன்னை முழுமையாக விடுதலை செய்யுமாறும் கோரிநின்றார்.

பிரதிவாதிக் கூண்டிலிருந்து வாய்வழியான சமர்ப்புகளை முன்வைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை, துப்பாக்கியால் சுட்டுக்கொலைசெய்தமை, மற்றுமொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்றமை ஆகிய குற்றங்களைச் சுமத்தி, சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் முன்னாள் எம்.பியான துமிந்த சில்வா, 11ஆவது பிரதிவாதியாவார்.

வாய்வழியான சமர்ப்புகளை முன்வைத்த அவர், 'கடந்த தேர்தலில் நான், கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றவன். இந்த வழக்கில் நான் நிரபராதி, 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவம் எதுவுமே எனக்கு ஞாபகத்தில் இல்லை.

கொழும்பு சென். பீற்றர்ஸ் கல்லூரியில் கல்வி பயின்ற நான், உயர்தரத்தை நிறைவுசெய்துகொண்டு, தேயிலை நிறுவனமொன்றில் ஒரு பிரிவின் பிரதானியாக கடமையாற்றினேன். அவ்வாறு தொழில் புரிந்துகொண்டிருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தேன்.

2004ஆம் ஆண்டு மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, கூடுதலான விருப்பு வாக்குகளுடன் சபைக்கு தெரிவானேன்.  அதன் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொண்டேன்.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில், அக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று, மேல் மாகாண சபைக்கு இரண்டாவது தடவையாக தெரிவானேன்.

2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு, ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானேன்' என்று கூறிய அவர், இந்த வழக்கிலிருந்த தன்னை முழுமையாக விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X