Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூலை 09 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் இந்நாட்டின் அனைத்து மட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ உறுப்பினர்களுக்கு அறிவை வழங்கும் மையமாக மாற்றப்படவிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
சர்வதேச தொடர்புகள், நிதிச் சட்டம், நிர்வாகம் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரதேச சபைகள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கௌரவ உறுப்பினர்களுக்கும் தேவையான அறிவு குறித்த நிலையத்தின் ஊடாகப் பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிலையத்தைத் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தரமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான மையமாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் Inter Pares உலகளாவிய திட்டத்தின் தலைவர் கலாநிதி ஜொனதன் மர்ஃபி (Dr.Jonathan Murph) மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் முகாமையாளர் இங்கிரிட் வோல்கர் (Ms. Ingrid Walker) உள்ளிட்ட தூதுக் குழுவினரை அண்மையில் (07) பாராளுமன்றத்தில் சந்தித்தபோதே கௌரவ சபாநாயகர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்தின் திறனை வலுப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியனத்தின் Inter Pares உலகளாவிய திட்டத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்கு நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப தினத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், மேற்பார்வை, நிதி மற்றும் நிர்வாகம் போன்ற விடயங்களை மேம்படுத்துவது மற்றும் இவற்றின் திறன்களை வலுப்படுத்துவதற்குத் தேவையான திறனைப் பெற்றுக் கொடுப்பது மற்றும் அனுபவத்தைப் பரிமாறிக் கொள்வது இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது என இந்தத் தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தவிருக்கும் விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (COPA) ஆகியவற்றினால் முன்னெடுக்கப்படும் விடயங்கள் பற்றி விளக்கியதுடன், அந்தக் குழுக்களுக்கு தற்போது கிடைத்து வரும் தொழில்நுட்ப உதவிகளுக்கு மேலதிகமாக, சட்ட உதவிகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை விரைவுபடுத்தப் பாராளுமன்றத்தின் மூலம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு சரியான முடிவும் எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் இங்கு தெரிவித்தார்.
இந்தக் குழுவினர் 07ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை பாராளுமன்றத்தின் பல்வேறு திணைக்களங்கள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 Jul 2025