2026 ஜனவரி 28, புதன்கிழமை

ஒரு ’இன்ச்’ கூட நகராத நாய்: நடந்தது என்ன?

S.Renuka   / 2026 ஜனவரி 28 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் நாய்களைப் போல விசுவாசமான ஒரு ஜீவனை பார்ப்பது கடினம்.. எந்தவொரு நிலையிலும் தனது உரிமையாளர்களை விட்டுத் தராது. இதை உணர்த்தும் ஒரு சம்பவம் தான் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்துள்ளது. 

கடும் குளிரைத் தாங்கும் உடை அணிந்திருந்தாலும் கூட கடும் குளிர் இங்கு வாட்டி வதைக்கும். மனிதர்கள் வெளியே வரக் கூட ஒரு முறைக்குப் பல முறை யோசிப்பார்கள். ஆனால், இந்த இடத்திலும் பிட்புல் நாய் தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளது.

நடந்தது என்ன?

பர்மௌரில் உள்ள பரம்ணி கோயிலுக்கு அருகில் விக்சித் ராணா மற்றும் பியூஷ் என்ற இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் காணாமல் போனமை தெரிந்தவுடன் அவர்களைத் தேடும் பணிகளைப் பாதுகாப்புப் படையினர் தொடங்கியுள்ளனர். அதில் கடும் பனிப்பொழிவில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்புப் படையினரும், அப்பகுதி கிராம மக்களும் அவர்கள் உடல் இருந்த இடத்திற்கு வந்தபோது, அங்கு கண்ட காட்சி அனைவரையும் கலங்கடித்தது. பியூஷின் உடல் பனியில் மூடிவிடவே அருகிலேயே அவரது செல்ல நாயும் அமர்ந்திருந்தது.

கடந்த நான்கு நாட்களும், அந்த விசுவாசமுள்ள நாய் உணவு, தண்ணீர் என எதுவுமே இல்லாமல் அங்கு உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளது. 4 நாட்களாக யாரும் வராத போதிலும், உரிமையாளரின் உடலை விட்டு ஒரு இன்ச் கூட நகராமல் அங்கேயே இருந்தது. உறைபனி மற்றும் பனிப் புயல்கள் அடித்தபோதிலும் அந்த நாய் நகரவில்லை. அப்பகுதியில் திரியும் காட்டு விலங்குகளிடமிருந்தும் உடலைப் பாதுகாத்து நின்றுள்ளது.

ஆக்ரோஷமடைந்த நாய்

முதலில் மீட்புப் படையினர் உடலை மீட்கச் சென்றபோது நாய் ஆக்ரோஷமானது. நாய்க்குத் தனது உரிமையாளர் பியூஷ் உயிரிழந்தது எல்லாம் தெரியாது. அவர் அங்கு இருக்கிறார். கூட நான் இருக்கிறேன் என்பது மட்டுமே அதற்குத் தெரியும். எனவே, அப்போது மீட்புப் படையினர் நெருங்கவே.. உரிமையாளருக்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கலாம் என கருதியதே இதற்குக் காரணம்.

இதனால் மீட்புப் படையினர் நீண்ட நேரம் முயன்றுள்ளனர். பல்வேறு முயற்சிகளுக்கும், ஆறுதலுக்கும் பிறகு தான் உதவி செய்வதற்காகவே அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை நாய் புரிந்து கொண்டு இறுதியில் ஒதுங்கி நின்றுள்ளது. அதன் பிறகே, மீட்புப் படையினரால் அவர்கள் உடலுக்கு அருகே செல்ல முடிந்தது. அதன் பிறகே உடலை மீட்ட மீட்புப் படையினர் அதை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர்.

வீடியோ டிரெண்டிங்

இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்த உருக்கமான விடயம் நெட்டிசன்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. 

உரிமையாளர் மரணமடைந்தாலும் கூட செல்லப் பிராணிகள் காட்டும் விசுவாசமும், அன்பும் எந்த மனித உறவுக்கும் நிகரற்றது என்பதையே இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X