2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

காணியைத் தருவதாக முதலமைச்சர் சி.வி உறுதியளித்தார்

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அரசாங்கம், வட மாகாணத்துக்கு 2,000 மில்லியன் ரூபாய் முதலீட்டில் வழங்கத் தயாராக உள்ள பொருளாதாரா மையம் அமைப்பதற்குப் பொருத்தமான காணியை, இவ்வார இறுதிக்குள் அடையாளம் கண்டு தருகிறேன் என்று வட மாகாண முதலமைச்சர்  சி.வி. விக்கினேஸ்வரன் உறுதியளித்துள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,

'எனது வட மாகாண விஜயத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய அடிப்படையை ஏற்படுத்த முடிந்துள்ளமையையிட்டு மகிழ்கிறேன். தென்னிலங்கையில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தொகையான பொருளாதார மையங்களுக்கு சமானமாக ஒரு பொருளாதார மையத்தை, வட மாகாணத்துக்கு என வவுனியாவில் அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த பொருளாதார மையம் அமைக்கப்படுமானால், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட விவசாயிகள், கமக்காரர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட அனைவருக்கும் தங்கள் விளைபொருட்களை விற்றுக்கொள்வதற்கு பெரும் வாய்ப்புக் கிடைக்கும். இது வடமாகாணத்துக்கு வழங்கப்படும் பெரும் வரப்பிரசாதம் ஆகும்' என்று அவர் தெரிவித்தார்.

'ஆனால், இந்த இடம் அமைக்கப்படுவதற்குப் பொருத்தமான இடத்தை வழங்குவதில் வட மாகாணசபைக்கும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையில் ஓர் இழுபறி இருந்தது. 

இதுபற்றி எனது வடமாகாண விஜயத்தின் போது, வவுனியா வாழ் மக்கள் பிரதிநிதிகள் எனது கவனத்துக்குக்கொண்டு வந்தனர். உடனடியாக இதுபற்றி நான் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பி. ஹரிசனுடன் உரையாடினேன். இதையடுத்து வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்தேன். 

உரிய காலத்துக்குள் இந்த இடம் வழங்கப்படாவிட்டால், குறிப்பிட்ட  2,000 மில்லியன் ரூபாய் தொகை, வேறு தென்னிலங்கை மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படலாம் என்ற அபாயம் பற்றி நாம் இருவரும் கலந்து பேசினோம்.  

இந்நிலையில் இதைத் தீர்த்து பொருத்தமான ஓர் இடத்தை வவுனியா நகருக்கு அண்மித்ததொரு இடத்தில் தெரிவு செய்து வழங்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இன்னமும் இரண்டொரு தினங்களில் இடத்தை அறிவிப்பதாகவும் அவர் என்னிடம் கூறியுள்ளார்' என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X