2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கையெழுத்து சேகரிக்கிறார் முருகனின் தாய்

Thipaan   / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஸ் மதுசங்க

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக் குற்றவாளிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுவிப்பதற்காக, 10 இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்று, இந்திய பிரதமரிடம் கையளிக்கும் முயற்சியில், கொலைக்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முருகனின் தாயார் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி, பளையைச் சேர்ந்த முருகனின் தாயாரான வெற்றிவேல் சோமனி என்பவரே இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும் இந்நடவடிக்கை, யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விளக்கமளித்துள்ள முருகனின் தாயார், 'உலக நாடுகளில் பாரிய குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பலருக்கு, அந்நாட்டுத் தலைவர்களால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் ஏராளம் உள்ளன.

இதன் பிரகாரம், பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக் குற்றவாளிகளாக கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் எனது மகன் முருகன் உட்பட ஏனையவர்களுக்கும் இவ்வாறான பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எனது இந்த கையெழுத்து வேட்டையின் நோக்கமாகும். இந்திய பிரதமர், எனது கோரிக்கையை செவிமடுத்து எனது மகனை விடுவிப்பார் என நம்புகின்றேன்' என்றார்.

இவ்வாறான கையெழுத்துச் சேகரிப்பின் மூலம், நன்மை கிட்டுமா என சிரேஷ்ட சட்டத்தரணி ஆர்.இரத்தினவேலிடம் விசாரித்த போது, 'இந்த வழக்குத் தொடர்பில் இந்தியாவுக்குள்ளேயே பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும், 25 வருடங்களு க்கு மேல் இவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றமையினால், அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோருவதில் எந்தவொரு தவறும் இல்லை' என்றார்.

இதேவேளை, குற்றவாளிகளை விடுவிக்குமாறு தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள அதேவேளை, குற்றவாளிகளை சித்திரவதைகளுக்கு உட்படுத்தி அவர்களிடமிருந்து பலவந்தமாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக இந்திய அதிகாரிகள் சிலர் அறிவித்துள்ளமையினால், குற்றவாளிகளின் விடுதலைக்கு சிறிதளவேனும் சாத்தியம் உண்டு.

அத்துடன், பொதுமக்களின் கருத்துக்களை செவிமடுக்கும் தன்மையொன்று இந்தியாவின் தற்போதைய அரசாங்கத்துக்கு உள்ளமையினால், இந்த தாயின் கையெழுத்து வேட்டைக்கு, உரிய பலன் கிட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் சட்டத்தரணி இரத்தினவேல் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X