2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

’கூட்டாளிகளுக்கு அதிக நன்மை’

Freelancer   / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல இளைஞர் கழகங்களின் சட்டப்பூர்வத்தன்மையையும் இரத்துச் செய்து, புதிய இளைஞர் கழகங்களை தாபித்தல் அல்லது மறுசீரமைத்தல் செயல்முறை இளைஞர் கழக அமைப்பினது இறையாண்மை ,ஜனநாயக செயல்பாட்டை ஆபத்தில் ஆழ்த்தி, புதிய கட்டளைகள் மூலம் தமது அரசியல் கூட்டாளிகளுக்கு அரசு நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியாக தெரிவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (05) அன்று நிலையியற் கட்டளை 27/ 2  இன் கீழ்  விசேட கூற்றை முன்வைத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் எதிர்கட்சித்தலைவர் பேசுகையில்,

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இலக்கம் 2-11/25/01 மூலம், 2025 மே 23க்கு முன்பு தாபிக்கப்பட்ட சகல இளைஞர் கழகங்களின் சட்டப்பூர்வத்தன்மையையும் இரத்துச் செய்து, புதிய இளைஞர் கழகங்களைத் தாபித்தல் அல்லது மறுசீரமைத்தல் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது சகல இளைஞர் கழகங்களும் அரசியல் மயமாக்கலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, அரசியல் நலன்களின் அடிப்படையில் இளைஞர் கழகங்களுக்கு நிறைவேற்று தர உத்தியோகத்தர்களை நியமிக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இளைஞர் கழக அமைப்பினது இறையாண்மை மற்றும் ஜனநாயக செயல்பாட்டை ஆபத்தில் ஆழ்த்தி, புதிய கட்டளைகள் மூலம் தமது அரசியல் கூட்டாளிகளுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியாக இது தெரிகிறது. எனவே, இது தொடர்பாக அரசாங்கம் இந்த சபையில் விளக்கத்தை வழங்க வேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்துகிறேன்.

இதன்பிரகாரம், பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் இலக்கம் 2-11/25/01 இன் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் கீழ், புதிய இளைஞர் கழகங்களைத் தாபித்தல் அல்லது மறுசீரமைத்தல் நடவடிக்கைகளின்போது, இளைஞர் கழகங்கள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?

அவ்வாறில்லையெனில், நாட்டில் காணப்படும் பல இளைஞர் கழகங்களில் (களுத்துறை, பொலனனறுவை, பதுளை, கேகாலை, கம்பஹா, அம்பாந்தோட்டை, நுவரெலியா, கொழும்பு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில்) நிறைவேற்று தர உத்தியோகத்தர் பதவிகளுக்குத் தனது அரசியல் கூட்டாளிகளை மட்டுமே நியமிக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருவதானது அரசாங்கம் இளைஞர் கழகங்களை அரசியல் மயமாக்குவதைக் குறிக்காதா?

அல்லது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் 2025.05.16 திகதியிடப்பட்டு  வெளியிடப்பட்ட கடிதத்தின் மூலம் 2025.05.23 க்கு முன்னர் தாபிக்கப்பட்ட சகல இளைஞர் கழகங்களின் சட்டப்பூர்வமான தன்மையையும் இரத்துச் செய்து, புதிய இளைஞர் கழகங்களைத் தாபித்தல் அல்லது மறுசீரமைத்தல் நடவடிக்கையில் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் யாது?

சகல இளைஞர் கழகங்களுக்கும் பொருந்தக்கூடிய நிலையியற் கட்டளைத் தொகுப்பைத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்வைத்துள்ளதா? அந்த நிலையியற் கட்டளைகள் இந்தச் சபையில் சமர்ப்பிக்கப்படுமா?

 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய நிலையியற் கட்டளைகள் மூலம் இளைஞர் கழகத்தில்  நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர் பதவியை வகிப்பதற்குக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் செயற்பாட்டு உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதா? இது வெறுமனே தமது அரசியல் கூட்டாளிகளை இளைஞர் கழகங்களின் நிறைவேற்று தரப் பதவிகளுக்கு நியமிப்பதற்கு எடுத்த செயல்முறையல்லவா? இளைஞர் கழக யாப்பை மீறும் செயலாக இதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?

கிராம சேவைப் பிரிவுகளிலிருந்து மேல் நோக்கி மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் கால் பதிக்க இளைஞர்களுக்கு களமமைத்த இந்த இளைஞர் கழகங்கள் கட்சி சார்பின்றி செயல்பட்டன. எந்த இளைஞரும் இதில் இணைந்து கொள்ளும் நிலை காணப்பட்டது. கட்சி பேதங்கள் இல்லாமல் செயல்படச் சிறந்த தீர்வு இளைஞர் சம்மேளனங்களும் இளைஞர் பாராளுமன்றத்தையும் ஒன்றிணைத்து அரசாங்கம் 150 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கினாலும், 450 மில்லியன் ரூபா மதிப்புள்ள திட்டமாக இது மாற்றப்பட்டது. கிராமத்துக்கு ஒரு கோடி திட்டத்தின் கீழ் 4,500 இலட்சம் ஒதுக்கப்பட்டாலும், 9,000 இலட்சம் மதிப்புள்ள சேவைகள் இதன் மூலம் ஆற்றப்பட்டுள்ளன என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .