2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

காத்தான்குடி கடலில் தத்தளித்த ’’கல்கத்தா’’ படகு

Editorial   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் நடுக்கடலில் அநாதரவாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியப் படகு ஒன்றை, காத்தான்குடி மீனவர்கள் இன்று (20) நண்பகல் கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.

கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்தப் படகு பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டது.

மீட்கப்பட்ட குறித்த படகில் "கல்கத்தா விளையாட்டுக் கழகம்" (Calcutta Sports Club) எனப் பொறிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்தப் பிரதேசக் கடல் பகுதியில் இதுவரை காலமும் இவ்வாறானதொரு படகு தத்தளித்த நிலையில் கண்டெடுக்கப்படவில்லை எனவும், இதுவே முதல் தடவை எனவும் பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

படகைச் செலுத்துவதற்கு எவருமின்றி, இயந்திரமும் இல்லாத நிலையில் நடுக்கடலில் படகு தத்தளிப்பதாகக் காத்தான்குடி மீனவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கடற்படை மற்றும் இராணுவத்தினரின் அனுமதியைப் பெற்ற மீனவர்கள், படகுகள் மூலம் நடுக்கடலுக்குச் சென்று, குறித்த படகைக் கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.

சுமார் 18 அடி நீளம் கொண்ட இந்தப் படகு, தற்போது மேலதிக விசாரணைகளுக்காக இராணுவம் மற்றும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துக் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

 

 

ரீ.எல். ஜவ்பர்கான் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .