2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்ததில் 10 பேர் பலி

Editorial   / 2022 மார்ச் 06 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மடஹள்ளி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கும்பகல்லு கிராமத்தில் ஸ்ரீராமகுன்று மலை உள்ளது. இந்த மலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை அந்தப்பகுதியை சேர்ந்த மகேந்திரப்பா மற்றும் கேரளாவை சேர்ந்த அக்கீம் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து கல்குவாரி நடத்தி வருகிறார்கள்.

இந்த கல்குவாரியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்த கல்குவாரியில் பாறை வெடி வைத்து நேற்று முன்தினம் தகர்க்கப்பட்டு கற்களை உடைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.

  அப்போது வெடியின் அதிர்வால் குன்றின் மேல் இருந்து பெரிய பாறாங்கல் ஒன்று எதிர்பாராதவிதமாக உருண்டு கீழே விழுந்தது. அந்த பாறாங்கல் கீழே இருந்த வாகனங்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த கோர விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தும், உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

  இதுபற்றிய தகவல் அறிந்ததும் குண்டலுபேட்டை நகர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பொலிஸார் நடத்திய விசாரணையில் இந்த கோர விபத்தில் 10 பேர் உடல் நசுங்கி பலியானது தெரியவந்தது.

மீட்பு பணி

  இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல், பொலிஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

  இந்த நிலையில் இந்த கல்குவாரியின் குத்தகைதாரர்களான மகேந்திரப்பா, அக்கீம் மற்றும் குவாரி மேற்பார்வையாளர் நவீத் ஆகியோர் மீது  கனிம வளத்துறை அதிகாரிகள் முறைப்பாடு  செய்தனர். அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும், அரசு உத்தரவை மீறி அதிக அதிர்வினை கொண்ட வெடிகளை பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .