2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

குளிர்சாதன இயந்திரத்தினுள் மயக்க மருந்து செலுத்தி நூதன கொள்ளை

Editorial   / 2026 மார்ச் 24 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கீதபொன்கலன்

 திருகோணமலை, வித்தியாலய ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து செலுத்திப் பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை 2.00 மணியளவில் மதிலேறிக் குதித்த திருடர்கள், வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த அறையின் வெளியில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதன இயந்திரத்தினுள் மயக்க மருந்தைச் செலுத்தியுள்ளனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்றுள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

வீட்டிலிருந்த அலமாரிகள் மற்றும் பெட்டிகளைத் திறந்து நகைகளைத் தேடிய திருடர்களுக்கு, நகை எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, மேசையிலிருந்த மடிக்கணினி ஐபேட், கைபேசி மற்றும் 12,000 ரூபாய் பணம் ஆகியவற்றைத் திருடியுள்ளனர். மேலும், வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளரின் மோட்டார் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு, வீட்டின் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற திருடர்கள், வித்தியாலய வீதி வழியாக இராசவரோதயம் வீதிக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் பிரதான வாசலுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளனர்.

காலையில் உறக்கத்திலிருந்து எழுந்த வீட்டின் உரிமையாளர், கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். கொள்ளைச் சம்பவம் குறித்து உடனடியாகத் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குளிர்சாதன இயந்திரம் ஊடாக மயக்க மருந்து செலுத்தப்பட்டமை கண்டறியப்பட்டது. இதற்கிடையில், காணாமல் போன தனது மோட்டார் சைக்கிளை அயல் வீதிகளில் தேடிய உரிமையாளர், தேவாலயத்தின் முன்னால் அது நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.

தற்போது இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளைத் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .