2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கெர்னரின் பிடியாணை மீளப்பெறப்பட்டது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக ஊடக செயற்பாட்டாளரும் காலிமுகத்திடல் போராட்டக்கள உறுப்பினருமான கலாநிதி பத்தும் கெர்னர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (24) சரணடைந்ததை அடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெறப்பட்டது.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாமல் இருந்தமைக்காக பத்தும் கெர்னரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல, நேற்று (23) பிடியாணை பிறப்பித்திருந்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலேரத்ன மற்றும் சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோருடன் பத்தும் கெர்னர், மன்றில் இன்று (24) சரணடைந்தார்.

அடுத்த விசாரணைத் திகதி தொடர்பான தவறான புரிதல் காரணமாக தமது சேவை பெறுநரால், செவ்வாய்க்கிழமையன்று (23) நீதிமன்றில் ஆஜராக இயலவில்லை என பிரதிவாதியின் சட்டத்தரணி, மன்றுக்கு அறிவித்தார்.

நீதிமன்றில் மன்னிப்புக் கோரிய பத்தும் கெர்னர், அடுத்தடுத்த தவணைகளுக்கு ஆஜராவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, நீதிமன்றத்தை தவிர்க்க வேண்டாம் என்று அறிவுறுத்திய மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல, பிடியாணையை மீளப் பெற்றதுடன், நீதவான் விசாரணைக்கான தினமாக நவம்பர் 29ஆம் திகதியை நிர்ணியித்தார்.
  
கடந்த ஜூலை 13ஆம் திகதியன்று பொல்துவ சந்திக்கு அருகில் நடைபெற்ற  போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைகளில் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றங்களை புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் பத்தும் கெர்னர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X