2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிறுநீரக சத்திரசிகிச்சை கோப்புகளை ஒப்படைக்கவும்

Kanagaraj   / 2016 மே 03 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த பல வருடங்களாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக சத்திரசிகிச்சை தொடர்பிலான விவரங்கள் அடங்கிய போப்புகளை, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

சுகாதார பணிப்பாளர் பாலித மஹிபால ஹேரத்துக்கே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சம்பந்தமான வழக்கு, கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலங்கைக்கு வந்து சிறுநீரகத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மிரிஹான பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜைகள் எண்மரில், பிரதான சந்தேகநபரான விஜிதாஜினி சுரேஸ் லக்ஷ்மன் குமார் என்பவர், இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடொன்றுக்குத் தப்பிச்சென்றுள்ளார் என, கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலப்பிட்டியவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட அவர், தப்பியோடிய சந்தேகநபரை கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து, மேற்படி இந்தியப் பிரஜையின் வெளியேற்றம் தொடர்பான முழுவிவரங்கள் அடங்கிய அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு, நீதவானினால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக, மிரிஹான பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகரை, எதிர்வரும் 16ஆம் திகதியன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினத்துக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தியர்கள் எண்மர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பிரதான சந்தேகநபரான விஜிதாஜினி சுரேஸ் லக்ஷ்மன் குமார் என்பவர், மிரிஹான தடுப்பு முகாமிலிருந்து தப்பியோடியிருந்தார்.

இந்நிலையில், ஏனைய சந்தேகநபர்கள் எழுவரையும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அனுப்புமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால் கடந்த மாதம் 19ஆம் திகதியன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்கள் எழுவரும், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X