2025 ஜூலை 10, வியாழக்கிழமை

‘சஜித் புது எஞ்ஜின் ரணிலோ பழைய எஞ்ஜின்’

ஆர்.மகேஸ்வரி   / 2020 மார்ச் 04 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழைய பெட்டிகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஐ.தே.க எனும் பெரும் ரயில், பழைய எஞ்ஜினால் இன்னமும் இழுக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனரெனத் தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், ஆகவேதான், அந்த ரயிலுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியெனும் பெட்டிகளுடன், சஜித் எனும் புதிய எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

பழைய ரயிலில் காணப்படும் சில குறைப்பாடுகளால், தேரர்கள் சிலர், கலைஞர்கள், தொழிற்சங்கவாதிகள், நிபுணர்கள், இளைஞர்கள் ஏறவில்லை. ஏறுவதற்கும் மறுக்கின்றனர் எனத் தெரிவித்த அவர், புதிய எஞ்ஜினுடன் கூடிய புதிய ரயிலில் ஏறிப் பயணிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பு விடுத்த அவர், கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவற விடவேண்டாமெனக் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு 15 -20 இலட்சம் மிதக்கும் வாக்குகள் கிடைத்ததுடன், இதில் அவர்களின் அறிக்கைக்கமைய 5 இலட்சம் மிதக்கும் வாக்காளர்கள் இலங்கைக்கு வருகை தந்து கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்துள்ளனரெனத் தெரிவித்த அவர், குறித்த மிதக்கும் வாக்களார்கள் தொடர்ச்சியாக கட்சிகளுடன் இணைந்திருப்பவர்கள் அல்லர். அந்ததந்த கால சூழ்நிலைக்கு ஏற்பவே அவர்கள் வாக்களிப்பர் என்றார்.

“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை அடிப்படையாக வைத்து, நாட்டில் இனவாதத்தைத் தோற்றுவித்து, வடக்கில், சிங்கள மொழியிலான பெயர் பலகைகளை எழுதியே எமது ஆட்சியை அவர்கள் கைப்பற்றினர்” என்றார்.

கோட்டாபயவுக்கு வாக்களித்த 5 இலட்சம் மிதக்கும் வாக்காளர்களும் வெளிநாடுகளுக்குத் திரும்பிவிட்டனர் என்பதனால்தான், 1 இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்றார்.

விசேட தேவையுடைய இராணுவத்தினரை வீதிக்கு இறக்கி அவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்து, ஆட்சிக்கு வந்தவர்கள், கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த விசேடத் தேவையுடைய இராணுவத்தினரின் கூடாரத்தை உடைத்து, இராணுவத்தினர் பிச்சைக்காரர்களைப் போல் செயற்பட வேண்டாமென அறிவுறுத்தியுள்ளனர் எனத் தெரிவித்த அவர், இதுவே இன்றைய ஆட்சியாளர்களின் நிலைமை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .