2025 ஜூலை 23, புதன்கிழமை

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் இந்திய ஊடகத்தின் செய்தி

Freelancer   / 2025 ஜூலை 22 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி மனித புதைகுழி (mass grave) பற்றிய செய்தி தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்திய ஊடகங்களும் இந்த விடயத்தை உலகறியச்செய்கின்றன.

அந்த வகையில் இந்திய ஊடகம் ஒன்றில் செம்மணி பற்றிய செய்தியை இங்கே பார்ப்போம்...

யாழ்ப்பாணத்தின் செம்மணி கிராமம் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக புதைந்து கிடந்த மனித உரிமை மீறல்களின் கோர முகத்தை வெளிப்படுத்தும் ஒரு மனித புதைகுழி (mass grave), இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பின் தோல்விகளை மீண்டும் உலகறியச் செய்துள்ளது.

2025 பிப்ரவரியில், செம்மணியிலுள்ள, இந்து மயானத்திற்கு அருகில் கட்டுமானப் பணியாளர்கள் திடீரென மனித எலும்பு கூடுகள் வெளியே வந்ததை பார்த்து அதிர்ந்து போனார்கள். 

இதையடுத்து, நீதிமன்றம் இதில் தலையிட்டது. மேலதிக அகழ்வாராய்ச்சிக்கு உத்தரவிட்டது. தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், ஜூன் 2 ஆம் திகதி 19 எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர். 

ஜூலை 5 ஆம் திகதி நிலவரப்படி, தொடர்ந்து நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் குழந்தைகள் உட்பட 45 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுத்தது.

புலிகள் என கருதி சித்திரவதை செய்து ராணுவம் இவர்களை புதைத்திருக்கலாம் என்பது அனுமானமாக இருந்தது. ஆனால், பள்ளிக்கூட புத்தக பையுடன் ஒரு குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டதும், இங்கு நடந்திருப்பது இனப்படுகொலை என்ற கோபம், தமிழர்களிடையே எழுந்துள்ளது. 

குழந்தை விளையாடிய பொம்மை இந்த புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது இந்த சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்திவிட்டது. குழந்தைகளை கூட விடாமல் கொன்று வேட்டையாடி புதைத்த கொடூரர்கள் யார் என்ற கேள்விக்கான விடை இலங்கை ராணுவத்தை நோக்கி திரும்புகிறது. 

1998 ஆம் ஆண்டு வரை செம்மணியின் இருப்பு யாருக்கும் தெரியாது. 18 வயது கிருஷாந்தி குமாரசாமி என்ற தமிழ் மாணவியை பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை செய்து தண்டனை பெற்ற லான்ஸ் கோர்பரல் சோமரத்ன ராஜபக்சே என்பவன், செம்மணி மனிதபடுகுழி பற்றி முதல் முறையாக வாய் திறந்தான். 

1995-1996 ஆம் ஆண்டுகளில் ராணுவம் யாழ். குடாநாட்டைக் கைப்பற்றிய பின்னர் காணாமல் போன நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், செம்மணிக்கு அருகிலுள்ள புதை குழியில் புதைக்கப்பட்டதாக ராஜபக்சே தெரிவித்தான். 

1999 இல் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட அகழ்வாராய்ச்சியில் 15 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன, அதில் இரண்டு 1996 இல் காணாமல் போன ஆண்கள் என அடையாளம் காணப்பட்டன. 

தற்போதைய அகழ்வாராய்ச்சிகள் பழைய காயங்களை மீண்டும் கிளறுவதோடு, இலங்கையின் படுகொலைகள் குறித்து சர்வதேச மேற்பார்வைக்கான அழைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளன. R

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .