Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2017 ஜூலை 27 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராமானுஜன் நிர்ஷன்
நாட்டை முடக்கும் செயல்களில் ஈடுபடும் சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்றும் தற்போதுள்ள ஜனநாயக சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் நேற்று சிறப்பு உரை ஆற்றினார்.
இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில், ‘எரிபொருள் விநியோகம், அத்தியாவசிய சேவையாக நேற்றிரவு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு, கொள்கை, நோக்கங்களை இந்தச் சபைக்கு தெளிவுபடுத்துவதற்கு நாம் தீர்மானித்தோம். நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்ற அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. கடந்த காலங்களில் இவ்வாறான நடைமுறைகள் செயற்படுத்தப்படவில்லை.
எந்தவொரு தொழிற்சங்கமாயினும் அவர்களுடைய உரிமைகளுக்காக, நலனுக்காக வேண்டுகோள்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாயின், அதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது.
ஆயினும் ஒரு சில பிரிவினர் அடிப்படையற்ற, ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் எதுவும் இல்லாமல் நாட்டில் சாதாரண மக்களின் வாழ்க்கையை சிதைக்கும் வண்ணம் முடக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பார்களாயின் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.
எமது அரசாங்கம் எந்தவொரு தொழிற்சங்கத்துடனான பேச்சுவார்த்தைகளையும் தவிர்த்தது இல்லை. பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களுடன் எமது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்கள். நான் ஏப்ரல் 24ஆம், ஜுலை 13ஆம் திகதிகளில் கலந்துரையாடல் நடத்தியிருந்தேன்.
இந்தக் கலந்துரையாடலில் பிரதான மூன்று விடயங்கள் தொடர்பாகப் பேசப்பட்டன. ஹம்பாந்தோட்டை எரிபொருள் களஞ்சியத் தொகுதி, திருகோணமலை எரிபொருள் களஞ்சியம், சப்புகஸ்கந்த களஞ்சியத் தொகுதியை துரிதமாக புனர்நிர்மாணம் செய்தல் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. எந்த வகையிலும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பிரச்சினைகள் ஏற்படும் வண்ணம் அரசாங்கம் நடந்துகொள்ளாது என நான் அந்த சந்தர்ப்பத்தில் உறுதியளித்திருந்தேன்.
தற்போது நாட்டில் டெங்கு நோய் பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையிலிருந்து மீள்வதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எரிபொருள் விநியோம் தடைப்படுமாயின் முழு நாட்டிலும் அன்றாட நடவடிக்கைகள் முடங்கிப்போகும். வைத்திய ஊழியர்களின் போக்குவரத்து, பொதுப் போக்குவரத்து தடைப்படுவதுடன் சுகாதாரச் சேவைக்கு பயன்படுத்தப்படுகின்ற இயந்திரங்களையும் இயக்க முடியாத நிலை ஏற்படும். அத்துடன் விமான சேவைகள் பாதிப்படைதல், துறைமுக சேவைகள் பாதிப்படைதல் என்பவற்றால் பொருளாதாரமும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடுகிறது.
அதுமாத்திரமல்லாது சாதாரண பொதுமக்களின் வாழ்க்கையும் பாதிப்படைகிறது. குறிப்பாக, மாணவர்களின் பரீட்சை நெருங்குவதால் அதிலும் பிரச்சினை ஏற்படுகிறது.
நேற்றிரவு பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் பிரச்சினை உருவானதாக அறியக்கிடைத்தது. எரிபொருள் விநியோத்தை தடை செய்தமை, டயர்களின் காற்றுப் போகச் செய்தமை உள்ளிட்ட செயல்கள் இடம்பெற்றுள்ளன.
இவை அத்தனை விடயங்களையும் மிக அவதானமாக கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோகத்தினை அத்தியாவசிய சேவையாக பிரகடனப் படுத்தினோம்.
அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த வளாகம் மற்றும் விநியோக வழிகளுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிபொருள் விநியோக செயற்பாடுகளுக்குப் பூரண பாதுகாப்பை வழங்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று (26) நண்பகல் ஆகும்போது அனைத்து நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன. இப்போதும் எண்ணெய் கொள்கலன்கள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன.
நாங்கள் ஜனநாயகத்தை காப்பாற்றுகிறோம். ஜனநாயகத்தின் பெறுமதியை உயர்த்தியிருக்கிறோம். நீதிமன்றத்தையும் நீதியையும் நாம் கௌரவிக்கிறோம். ஆனாலும்,அவற்றை வீண் செய்து நாட்டை முடக்கும் செயல்களில் ஈடுபடும் சக்திகளுக்கு நாம் அடிபணிய மாட்டோம். அந்தச் சக்திகளுக்கு சிரம் தாழ்த்த மாட்டோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாட்டு மக்களின் நலன் கருதி எப்போதும் செயலாற்றுகிறோம். நாம் வழங்கியுள்ள ஜனநாயக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த இடமளிக்க மாட்டோம்.
நாங்கள் நல்ல விடயங்களை செய்கிறோம். நல்ல விடயங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறோம். நல்ல விடயங்களுக்காக முன் நிற்கிறோம். கெட்ட விடயங்களுக்கு எப்போதும் இடம் கொடுக்க மாட்டோம்.
நாட்டு மக்களின் நலன் கருதி சரியான வழியில் கெட்ட விடயங்களை தோற்கடிப்போம்’ எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
2 hours ago
11 May 2025