2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

செம்மலை விகாரைக்கு பொலிஸ், இராணுவப் பாதுகாப்பு; நிர்மாணப் பணிகளை நிறுத்தவும் உத்தரவு

Editorial   / 2019 ஜனவரி 25 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - செம்மலை - நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு, பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கோவில் வளாகத்தில் அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட விகாரைக்கு அருகில், கடந்த புதன்கிழமையன்று (23), புத்தர் சிலையொன்று திறக்கப்பட்ட நிலையில், பிரதேச மக்களாலும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தரப்பிலிருந்தும், பலத்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையிலேயே, குறித்த விகாரைக்கு, பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறு, தான் விடுத்த  கோரிக்கையை அடுத்தே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக, குறித்த விகாரையின் விகாராதிபதி கொழும்பு மேதாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த விகாரை, கி.பி 3ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டு உள்ளதென வரலாற்றுச் சான்றுகள் உள்ளதாகவும் தற்போது இந்தப் பிரதேசம், தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விகாரை தொடர்பில், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (24) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நீதவான் அழைப்பாணை விடுத்தார்.

இதனால், நேற்று மன்றில் ஆஜராகியிருந்த தேரர், இந்தப் பிரச்சினையை, சுமூகமாகத் தீர்க்க விரும்புவதாகவும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், மன்றில் அறிவித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை, எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அதுவரையில், இரண்டு தரப்பினரும், குறித்த பகுதியில், எந்தவொரு நிர்மாணப் பணிகளையோ அல்லது அபிவிருத்திகளையோ முன்னெடுக்கக் கூடாதென உத்தரவிட்டார்.

நாயாறு - நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு, கடந்த 15ஆம் திகதியன்று சென்ற பி​ரதேச மக்கள், அங்கு பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள முயன்ற போது,  அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த பிக்குவுக்கும் பொதுமக்களுக்கும் இடையில், முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த முறுகல் நிலை தொடர்பாக, முல்லைத்தீவு பொலிஸாரால், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், எதிர்வரும் 29ஆம் திகதியன்று, வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜராகுமாறு, முரண்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு, நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அவசர நிலையொன்றை உணர்ந்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர், நகர்த்தல் பத்திரம் ஒன்றின் மூலம், குறித்த வழக்கு விசாரணையை, நேற்று முன்தினத்துக்கு முற்போட்டுக்கொண்டனர்.

நேற்றைய வழக்கு விசாரணைகளில், குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கிராம மக்களின் சார்பில் ஆஜரானவர்களால் வெளிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை, நேற்றைய தினம் (24) மன்றில் ஆஜராகுமாறு, நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், புத்தர் சிலை திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .