2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜனவரி முதல் 25,000; பொலிஸார் பிரயோசனமில்லை எனவும் தெரிவிப்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

"போக்குவரத்தின் போது, சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் 7 குற்றச்சாட்டுக்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கும் கொள்கை, ஜனவரி மாத்திலிருந்து அமுலுக்கு வரும்" என, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (07) நடைபெற்ற போது, ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "வீதிகளில் ஏற்படும் விபத்தின் மூலம் நாளொன்றுக்கு 8 தொடக்கம் 10 பேர் வரை உயிரிழப்பதுடன், ஒரு நாளைக்கு 25க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர். ஆனால், இந்த 7 குற்றச்சாட்டுகளுக்கு 25,000 ரூபாய் தண்டம் அறவிடப்போகின்றோம் என்று அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டதன் பின்னர், ஒரு நாளைக்கு விபத்தின் மூலம் 2 பேரே உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு விபத்தினால் ஏற்பட்ட மரணங்கள் 2,700 ஆகும். சுமார் 12 மில்லியன் பேர் காயமடைந்தனர். எனவே, இந்த 25,000 ரூபாய் அபராதம் விதிப்பது தொடர்பில் எங்களுடைய தீர்மானம் மாற்றமடையாது.

இது குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், 25,000 ரூபாய் அபராதம் அமுலுக்கு வரும்" என்று கூறினார்.

"தனியார் பஸ்களின் வேலைநிறுத்தத்தின் போது, 128 பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?" என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், "128 பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றால், 128 பேர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்ததந்தப் பிரதேசத்திலுள்ள பொலிஸாருக்கு, எவரையும் கைது செய்ய முடியவில்லை என்றால், அது பொலிஸாரின் இயலாமையை எடுத்துக்காட்டுகின்றது. அவர்கள் பிரயோசனமில்லாதவர்கள் என்றே அர்த்தமாகும்" என்று கூறினார்.

இதேவேளை, டெங்கு நுளம்பு பரவும் அளவுக்கு தங்களது இருப்பிடத்தை வைத்திருப்பவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் முடிவிலும் மாற்றம் கிடையாது எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .