2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தாஜுதீன் கொலை: பொலிஸ் அதிகாரியின் வாக்குமூலத்தில் முரண்பாடு

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரூக் தாஜுதீன்

பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பான உண்மைகளை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமித் பெரேராவை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஒகஸ்டா அத்தபத்து, உத்தரவிட்டார்.

மேற்படி கொலை தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மன்றில் ஆஜராகிய இரகசியப் பொலிஸார்,

'கைதாகியுள்ள மேற்படி பொலிஸ் பரிசோதகர் சுமித் பெரேராவின் வாக்குமூலங்களில், பரஸ்பர முரண்பாடுகள் நிலவுகின்றன' என்று, நீதவானிடம் தெரிவித்தனர்.

இதனால், மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர், தாஜுதீனின் கொலை தொடர்பில் அறிந்திருந்தாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் அதனால், அவரைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் நீதவானிடம், இரகசியப்
பொலிஸார் கூறினர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதிவாதியின் சட்டத்தரணிகள், 'தமது கட்சிக்காரர், இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய, தனது சேவையை மேற்கொண்டுள்ளார்' என்று தெரிவித்தனர்.

அத்தோடு, அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் கோரினர்.

இந்த விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் 12அம் திகதியன்று, மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸின் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறி, இந்த வழக்கை ஒத்திவைத்தார். அத்துடன், அன்றைய தினத்தில், பிணை மனுவினைத் தாக்கல் செய்யுமாறும், நீதவான் அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X