2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு மாணவி கொலை

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, உக்குளாங்குளத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியான கெ.ஹரிஸ்ணவி (வயது 14), துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட பின்னர், கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை ஆசிரியையான தாயாரும் சகோதரர்களும் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில், தனிமையில் இருந்த மாணவி தாயார் வீடு திரும்பியபோது வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதன் பின்னர், சம்பவ இடத்துக்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் மற்றும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

வவுனியா வைத்தியசாலை நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஜே.சி. சமரவீர கடமை நிமித்தம் கொழும்பு சென்றிருந்தமையால் நேற்று வியாழக்கிழமை (18) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த மாணவி  துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் தன்னை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்றவரிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள முயற்சித்துள்ளார். இருப்பினும், துஷ்பிரயோகத்தின் பின்னர் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, அதன் பின் தூக்கில் போடப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை, வவுனியா பெருங் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, இறுதிக் கிரியையின் போது சடலத்தை புதைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த மாணவியின் உடற்பாகங்கள் சில மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X