2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

“ தங்கத்துக்காகவே வடக்கு முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினர்”

Editorial   / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக  வடக்கு முஸ்லிம்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்ற ஓர் ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளது என்று,  வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம்  முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு   காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

கறுப்பு அக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம்  ஷாஜஹான் தலைமையில் இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


1990 ஆண்டு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.இந்த காலகட்டத்தில் தான் விடுதலைப் புலிகள் தங்களது செயற்பாடுகளை உற்சாகமாக மேற்கொண்டு சென்ற காலம்.அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்த காலம்.1987 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலம்.அதே நேரம் தங்களை மேலும் எவ்வாறு வளப்படுத்தலாம் என்று யோசனை செய்கிறார்கள்.இவ்வாறு யோசிக்கின்ற போது தற்போது உள்ளது போன்று 1990 ஆண்டு அக்டோபர் மாதம் உள்ள காலப்பகுதியில் தங்கத்திற்காக விலை அதிகமாக இருந்தது.

எனவே தங்கத்தின் ஊடாக தங்களது அமைப்பினை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எவ்வாறு தங்கத்தை மீட்டெடுத்தல் என்ற எண்ணத்தில் ஈடுபட்டார்கள்.வட மாகாண முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்று பல ஆய்வுகள் நடைபெறுகின்றன.அதில் ஒன்று அன்று இருந்த தங்கத்தின் விலை காரணமாக தங்கத்தை சர்வதேசத்தின் ஊடாக கொண்டு சென்று அதனூடாக பணத்தை திரட்டி அதனூடாக ஆயுத கொள்வனவில் ஈடுபடலாம் என்ற ஒரு ஆய்வும் அவர்கள் மத்தியில் இருந்துள்ளது.

அந்த ஆய்வின் ஊடாக தான் வட மாகாண முஸ்லிம்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.வடக்கில் யாழ்ப்பாணம் மன்னார் பகுதியில் காத்தான்குடி பிரதேசம் போன்று அதிகளவானவர்கள் வியாபாரிகள்.அதாவது இவ்வாறான வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அந்த தங்கங்களை எடுத்தால் ஆயுத கொள்வனவிற்கான பணம் திரட்டி கொள்ளலாம் என்று தான் அந்த வெளியேற்றம் நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என பலரும் இன்றும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இருக்கின்ற போது வருகின்ற ஒவ்வொரு அரசாங்கத்திடமும் வடக்கு மாகாண முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட விடயம் தொடர்பாக ஓர் ஆணைக்குழுவினை நியமித்து முக்கியமாக இவர்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது தொடர்பான அறிக்கையை செய்து தருமாறு கோரியிருந்தோம்.ஆனால் இதுவரை அந்த ஆணைக்குழுவானது நியமிக்கப்படவில்லை.அவ்வாறான ஆய்வு மேற்கொள்ளப்படவும் இல்லை.உண்மையில் அது வேதனைக்குரிய விடயம்.நான் இன்றும் கூட மகஜர் ஒன்றை எழுதி கொண்டு வந்திருக்கிறேன்.இந்த மகஜர் ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பதற்காக ஆளுநர் ஊடாக அனுப்புவதற்கு எழுதப்பட்டுள்ளது.இந்த மகஜரில் அதே விடயத்தை மீண்டும் போட்டிருக்கிறேன்.சுமார் 35 வருடங்களுக்கு பிறகு ஒரு விடயத்தை நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே வருகின்றோம்.

எனவே அந்த அடிப்படையில் வட மாகாண முஸ்லிம்கள் தங்கத்திற்காக அல்லது தங்கத்தை கொள்ளையடிப்பதற்காக வேண்டி வெளியேற்றப்பட்டார்கள்.என்ற மிகவும் வேதனையான நிகழ்வு ஒன்று இருக்கிறது.அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் 1990 ஆண்டு அக்டோபர் மாதம் என்பது அந்த பிரதேசத்தில் வியாபாரிகள் மீனவர்கள்  விவசாயிகள் என சுமார் 75 ஆயிரம் முதல் 1 இலட்சம் பேர் வரை வெளியேற்றப்பட்டார்கள் என தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .