Freelancer / 2025 நவம்பர் 28 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை நேற்று இரவு பாதுகாப்பு அமைச்சில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமையை கருத்தில்கொண்டு, எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும், நிவாரணப் பணிகளைத் தொடர்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆளுங் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக இதுவரை வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை செயல்படுத்துதல் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள், அதற்கான உடனடி தீர்வுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், நீர்ப்பாசன கட்டமைப்பை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன், அதிக அளவு நீர் தேங்குவதால் குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் அணைகள் உடையும் அபாயம் உள்ளதால், அது பற்றி அவதானம் செலுத்தி நிலைமையை முகாமைத்துவம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாவட்டங்களுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூறாவளியின் தாக்கத்தால் கிழக்கு கடற்கரையில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், சூறாவளி மற்றும் மழை காரணமாக அடிக்கடி ஏற்படும் காலநிலை மாற்றங்கள், அனர்த்த நிலைமைகள் மற்றும் ஆபத்தான பகுதிகள் குறித்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை பொதுமக்களுக்குத் தெரிவிக்க, தொடர்ந்து ஊடகங்களுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், சில சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்திகள் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பொறுப்புடனும் புரிதலுடனும் செயல்பட பொதுமக்களை அறிவுறுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.
அவசர அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட வீடுகள் மற்றும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாட்டை திட்டமிடுமாறும் ஜனாதிபதி அனர்த்த முகாமைத்துவத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன்போது தொடர்ச்சியான பிரச்சினையாக இருக்கும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் தாமதம் காரணமாக சரியான நேரத்தில் மக்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை என்றும் இந்த நிலைமையைத் தடுக்க முப்படைகளின் பொறியியல் பிரிவுகளின் உதவியைப் பெறுமாறும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
மேலும், சேதமடைந்த விவசாய நிலங்களை மீட்டெடுப்பதற்காக வழங்கப்பட வேண்டிய உர மானியங்கள் மற்றும் விதை நெல் வழங்குவதற்கான முறையான திட்டத்தை தயாரிக்குமாறு விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் அறிவுறுத்தினார்.
நாட்டைப் பாதித்துள்ள அவசர அனர்த்தம் காரணமாக பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை திறம்பட வழங்க சுற்றுலா சபைக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது கேட்டறிந்ததுடன், நமது நாடு எதிர்கொண்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுக்குத் தெளிவுபடுத்த ஒரு குழுவை நியமிக்குமாறும் ஆலோசனை வழங்கினார். (a)

19 minute ago
34 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
34 minute ago
9 hours ago