2026 மார்ச் 23, திங்கட்கிழமை

தந்தை மகன் கொலை: பொலிஸார் 9 பேரும் குற்றவாளிகள்

S.Renuka   / 2026 மார்ச் 23 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்திய சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் இன்று திங்கட்கிழமை (23) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கைது செய்யப்பட்ட பொலிஸார் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

பொலிஸார் தான் தந்தை மகன் இருவரையும் அடித்து கொலை செய்துள்ளதாகவும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தந்தை-மகன் பொலிஸாரால் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு 6 ஆண்டுகளுக்குப் பின் இன்று  வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரியான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பொலிஸார் தாக்கியதில் கடுமையாக காயமடைந்து அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கடை திறக்கும் நேரம் தொடர்பான விவகாரத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் அங்கு தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை ஆரம்பத்தில் மாநில பொலிஸார் விசாரித்தாலும், பின்னர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ விசாரணையின் அடிப்படையில், அப்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மொத்தம் 9 பொலிஸார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் பொலிஸார் ரேவதி, பியூலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டு, விரிவான விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிஸார்தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வழக்கின் அனைத்து தரப்பினரின் வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி முத்துக்குமார் இந்த வழக்கை இன்று திங்கட்கிழமை (23) தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார். இன்று நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு அளித்துள்ளார்.

அப்போது பொலிஸார் தாக்கியதால் தான் தந்தை மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர். பொலிஸார் அவர்களை அடித்து கொலை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு கூறினார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம், பொலிஸாரின் செயல்பாடு மற்றும் மனித உரிமைகள் குறித்து நாடு முழுவதும் பெரிய விவாதத்தை உருவாக்கியது. சமூக வலைத்தளங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த வழக்கில் விரைவான நீதி கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனால் இந்த வழக்கு தேசிய அளவில் கவனம் பெற்ற முக்கிய வழக்காக மாறியது.

தற்போது, இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும், அல்லது நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தந்தை-மகன் பொலிஸாரால் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு 6 ஆண்டுகளுக்குப் பின் வெளியாக உள்ளதால், பொலிஸார் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு நிலவுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .