2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தனியார் பஸ் கட்டண விவகாரம்: 'முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை'

Princiya Dixci   / 2016 ஜூன் 03 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

'தனியார் பஸ் சங்கத்தின் தலைவரால், பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது. கட்டண அதிகரிப்பு தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் மட்டுமே முடிவெடுக்கமுடியும் என, பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'வாகன நெரிசல் காரணமாக, எரிபொருட்கள் கூடுதலான வீண்விரயமாகின்றன. ஆகையால், வீதி நெரிசல் கட்டணமும் பயணிகளிடமிருந்து அறவிடப்படும்... என, அகில இலங்கை தனியார் பஸ் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார். அவ்வாறு, அவரால் செய்யமுடியாது.

வாகனங்களின் அதிகரிப்பால் வாகன நெரிசலும் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால், எரிபொருட்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது உண்மையே. இருப்பினும் தனிப்பட்ட ஒருவரின் யோசனை என்ற அடிப்படையில் அவரது யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான முடிவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மட்டுமே எடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தனியார் பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, அடுத்த வாரமளவில் இடம்பெறவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ. ஹேமச்சந்திர தெரிவித்தார்.

கட்டணத் திருத்தம் தொடர்பிலான அறிக்கையொன்று, போக்குவரத்து அமைச்சரிடம் கையளிக்கப்படும். அதன்பின்னரே இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்படும் போது, தனியார் பஸ்களில், எரிபொருட்களின் செலவு 27 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளது. ஆகையால், வீதி நெரிசல் கட்டணத்தை, பயணிகளிடமிருந்தே அறவிடவேண்டும். அவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்காவிடின், வேலைநிறுத்தப் போராட்டத்தில் கட்டாயம் குதிப்போம் என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .