2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

’தென்னக்கோனை நீக்குவது சிறந்த எடுத்துக்காட்டு’

Freelancer   / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்கடத்தல் மற்றும் மனித சித்திரவதை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவரும் அடிப்படை மனித உரிமை மீறல் குற்றவாளி என்று உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவருமான பொலிஸ்மா அதிபரான  தேசபந்து தென்னக்கோனை  பதவி நீக்குவது எதிர்காலத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு  என  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது  தொடர்பான  விவாதத்தை பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (05) அன்று  ஆரம்பித்து வைத்து  உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்
மேலும் அவர் பேசுகையில்,

தேசபந்து தென்னக்கோனின் துர்நடத்தையை அடிப்படையாகக் கொண்டு  அவருக்கு எதிராக 23 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்த குற்றச்சாட்டுக்களை  சிறப்பு  குழு விரிவாக ஆராய்ந்தது.தேசபந்து தென்னக்கோன் மீது முன்வைக்கப்பட்ட 23 குற்றச்சாட்டுக்களில் 19 குற்றச்சாட்டுக்கள் 38 சாட்சியாளர்களின் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு நிரூபிக்கப்பட்டுள்ளன. தேசபந்து தென்னக்கோன் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, நீதிமன்ற வழக்கு விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. ஆட்கடத்தல் மற்றும் மனித சித்திரவதை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களும் தேசபந்து தென்னக்கோன் மீது சுமத்தப்பட்டுள்ளன.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் உயர்நீதிமன்றம் பல தீர்ப்புக்களை வழங்கியுள்ளது. அடிப்படை உரிமை மீறல் குற்றவாளியாக கருதப்பட்டுள்ளார். இவரை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்குக் கடந்த அரசாங்கத்தின்  ஆட்சியாளர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திலும் தேசபந்து  தென்னக்கோனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்  பதவிக்கான அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டமை பல விடயங்களில் வெளிப்பட்டுள்ளன.அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்திய  தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கமும், அதன் பின்னரான அரசாங்கங்களும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளன.

 காலி  முகத்திடல், “கோட்டா  கோ கம”, “அலரி மாளிகை  மைனா கோ கம”  மீதான தாக்குதல் தொடர்பிலும் தேசபந்து தென்னக்கோன் மீது அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியல் நோக்கத்துடன் சிவில் பிரஜைகள் மீதான தாக்குதலுக்கு அவர் உதவி   வழங்கியுள்ளார். அமைதியான போராட்டத்தின் மீது  தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது  தேசபந்து தென்னக்கோன்  அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். வன்முறையாளர்களுடன் ஒன்றிணைந்து சிவில் பிரஜைகள் மீது  இவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

2023.12.31ஆம் திகதியன்று மாத்தறை வெலிகம டப்ள்யூ 15 ஹோட்டல் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்   தேசபந்து தென்னக்கோன் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். இவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்களைக் கருத்திற் கொள்ளாமலே கடந்த அரசாங்கம் இவரை பொலிஸ்மா அதிபராக நியமித்தது.

பொலிஸ்மா அதிபர்  தேசபந்து தென்னக்கோன்  குற்றவாளி என்று  பிரதம நீதியரசர் என்.பி.சூரசேன தலைமையிலான  சிறப்புக்குழு ஏகமானதாக அறிவித்துள்ளது. சட்டவிரோதமான செயற்பாட்டுக்கு பொலிஸ்மா அதிபர் பதவியைப் பயன்படுத்தி கட்டளை பிறப்பித்துள்ளார்.பல துர்நடத்தையான செயற்பாடுகளுக்கு தேசபந்து தென்னக்கோன் பொறுப்புக்கூற வேண்டும் .எனவே இலங்கை  வரலாற்றில்  முதன்முறையாக 2002 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றும் (நடவடிக்கை முறை) சட்டத்தின் பிரகாரம் பொலிஸ்மா அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .