Editorial / 2026 ஜனவரி 06 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும். இந்நிலையில்,
உலகத் தமிழரின் மருத்துவத் திருநாளில் அரச வேலை எதிர்பார்க்கும் சித்தமருத்துவர் சங்கம் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சித்த மருத்துவம் தமிழர்களின் தொன்மையான, தாய்மொழி சார்ந்த, வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த மருத்துவ மரபாகும். இது வேறு எந்த மருத்துவ முறையிலிருந்தும் உருவானதல்ல; தமிழர் நாகரிகத்தின் அறிவியல் அடையாளம்.
சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் ஒரு கிளை எனப் பார்க்கும் தவறான புரிதல்கள் இன்று பரவலாக உள்ளன. ஆனால் வரலாறு, இலக்கியம், மொழி, மரபு ஆகிய அனைத்தும் சித்த மருத்துவம் தனித்துவமான தமிழர் மருத்துவம் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.
சித்த மருத்துவத்தின் அடிப்படை சித்தர்கள் ஆவர். அகத்தியர், திருமூலர், போகர், புலிப்பாணி போன்ற சித்தர்கள் மனித உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நலனை ஆராய்ந்து, மருத்துவ நூல்களை தமிழில் வழங்கினர். “உடல் கோயில், உயிர் சிவன்” என்ற சித்த தத்துவம் நோயை மட்டும் அல்ல, மனித வாழ்வையே முழுமையாகக் கவனிக்கும் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
சித்த மருத்துவம் பஞ்சபூதக் கோட்பாடு, வர்மம், முக்குற்ற நிலை (வாதம், பித்தம், கபம்), நாடி, உணவே மருந்து என்ற கொள்கை ஆகியவற்றின் மூலம் தனித்த அறிவியல் கட்டமைப்பை கொண்டுள்ளது.
மருந்துகளும் நிலம், காலநிலை, உணவுப் பழக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. மூலிகைகள் மட்டுமல்லாமல், கனிமம், உலோகம், உப்பு வகைகள் போன்றவை நுண்ணிய சுத்திகரிப்பு முறைகளின் மூலம் மருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இது சித்த மருத்துவத்தின் அறிவியல் ஆழத்தையும், நடைமுறை திறனையும் காட்டுகிறது.
சித்த மருத்துவமும் ஆயுள்வேதமும் சில அடிப்படை கருத்துகளில் ஒற்றுமை கொண்டிருந்தாலும், மொழி, தத்துவம், மருந்து தயாரிப்பு, நோய் அணுகுமுறை ஆகியவற்றில் தெளிவான வேறுபாடுகளை காட்டுகின்றன. எனவே சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும்.
இன்று உலகத் தமிழரின் மருத்துவ தினம். இந்த நாளில் சித்த மருத்துவம் தமிழர்களின் சொந்த மருத்துவம் என்பதை உலகத் தமிழர் அனைவரும் பெருமையுடன் நினைவுகூர வேண்டிய நாள். சித்த மருத்துவத்தை பாதுகாப்பதும், வளர்ப்பதும், அடுத்த தலைமுறைக்கு அறிவியல் ஆதாரத்துடன் எடுத்துச் செல்வதும் தமிழர்களின் கடமையாகும்.
சித்த மருத்துவம் ஒரு மருத்துவ முறை மட்டுமல்ல; அது தமிழர் அறிவு, பண்பாடு, வாழ்வியல், ஆன்மிகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த முழுமையான வாழ்க்கை தத்துவம். உலகத் தமிழர் மருத்துவ தினம், இந்த உண்மையை உலகிற்கு உரத்துச் சொல்லும் நாளாக அமையட்டும்.
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago