Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 11 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
குற்றஞ்செய்த ஒரு தரப்பு, நடுவராக இருந்துகொண்டு விசாரணைகளை முன்னெடுக்க முடியாதெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், படுகொலை செய்யப்பட்டோர், பாதிக்கப்பட்டோர் என்போர் தமிழர்களாக இருப்பதால், அவர்கள் தொடர்பில் சட்டத்தில் காட்டப்படும் பாகுபாடு காரணமாகவே, தாம் சர்வதேச விசாரணையைக் கோருவதாகக் கூறினார்.
யுத்த காலத்தில், இராணுவத் தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகாவே, சர்வதேச விசாரணைக்குத் தயாராக இருக்கும் நிலையில், அரசாங்கம் ஏன் அஞ்சுகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல், ஆளொருவரின் இறப்புக்கான சேதங்களை அறவிடுதல் ஆகிய சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், ஊடகவியலாளர்களைக் கொலை செய்தவர்கள், இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், சட்டத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படவில்லை என்றும் கூறியதோடு, இந்த அரசாங்கமும், குற்றவாளிகளைத் தண்டிக்கும் நோக்கத்தில் இல்லை என்பதே உண்மையெனக் கூறினார்.
“சிங்கள ஊடகவியலாளர்களின் கொலைகள் குறித்து, குறைந்தபட்ச விசாரணைகளேனும் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. ஆனால், கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்து, எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
“1999ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில், தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
“அவர்கள் குறித்து, எந்தவொரு விசாரணையையும் நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க, அரசாங்கம் நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை” என்று கூறிய சுமந்திரன் எம்.பி, தமிழர் என்ற காரணத்தால் தான், சட்டம் கூட புறக்கணிக்கப்படுகின்றதா என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளதென்றார்.
கடந்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது உரையாற்றிய உறுப்பினர்கள், உள்ளக விசாரணைகள் குறித்துப் பேசியுள்ளனர். யுத்தக் குற்றங்கள் இல்லாத யுத்தம் ஒன்று இடம்பெறாதென, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ கூறியிருந்தார். அதேபோல், ஜே.வி.பியின் உறுப்பினர்களும், இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதையும் உள்ளக விசாரணைகளைக் கையாள வேண்டும் எனவும் கோரியுள்ளனர். அவர்களே, உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் நிலைமை, அந்தளவுக்கு இன்று உருவாகியுள்ளது என்றார்.
தமிழர்கள் என்ற காரணத்தால் அல்லது சிறுபான்மை என்ற காரணத்தால், சட்டம் சுயாதீனமாகச் செயற்படாதுள்ளமையே பிரச்சினையை ஏற்படுத்துகின்றது. பிரதான இரண்டு கட்சிகளும், அரசியல் நெருக்கடியில் ஈடுபட்ட போது நீதிமன்றத்தை நாடிய வேளையில், சட்டத்தின் சுயாதீனம் பற்றிப் பேசினீர்கள் என்று தெரிவித்த அவர், உங்களது பிரச்சினையில் சுயாதீனம் பற்றி பேசும் நீங்கள், ஏன் தமிழர் விடயத்தில் அதே சுயாதீனம் குறித்துப் பேச மறுக்கின்றீர்கள். இதுவே, நாமும் சர்வதேசத்தை நாடக் காரணமாக அமைந்துள்ளது என்றார்.
இலங்கையில், அரச தரப்புக்கும் ஆயுதப் படைக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தில், இரண்டு தரப்பும் குற்றம் செய்துள்ளதாக, சர்வதேச நாடுகள் கூறியுள்ளன. விடுதலைப் புலிகளின் பக்கமும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. இதனை நான் கூறினால், தமிழர் தரப்பே என்னை விமர்சிக்கும் என்றுத் தெரிவித்த அவர், ஆனால் உண்மை அதுவேயெனக் கூறினார்.
அதேபோல், இந்த விவகாரத்தில் உண்மைகளைக் கண்டறிய, யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பை நடுநிலை வகிக்கக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். அரச தரப்பினரும் யுத்தத்தில் ஈடுபட்டனர், ஆகவே, தீர்ப்பு வரும் நிலையில், அவர்கள் பக்கம் சார்பான வகையில் அமையும். குற்றத்தில் ஈடுபட்ட தரப்பு விசாரணை நடத்தவும் முடியாது. அது சுயாதீனம் அல்ல. ஆகவே, சர்வதேச நடுநிலையுடன் விசாரணைகளை நடத்த வேண்டுமென, சுமந்திரன் வலியுறுத்தினார்.
அதுமட்டுமல்ல, பாரதூரமான ஊழல் குற்றங்கள் குறித்து பேசினீர்கள். குற்றவாளிகளைத் தண்டிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பிரதான இரண்டு கட்சிகளும் திட்டமிட்டு, ஊழல் குற்றங்களைச் செய்து வருகின்றன. எதிரணியில் இருப்பவர்கள், ஊழல் குறித்து விமர்சிப்பதும் ஆளும் கட்சியினர் அதனைக் கண்டுகொள்ளாது ஊழல் செய்வதும், பின்னர் ஆட்சி மாறியவுடன் ஆளும் தரப்பினர் அதே ஊழலைச் செய்வதும், எதிர்க்கட்சி அதை விமர்சிப்பதும் மட்டுமே இடம்பெற்று வருகின்றதென்றுத் தெரிவித்த அவர், மாறாக, குற்றவாளிகளைத் தண்டிக்க எவரும் நினைப்பதில்லை என்றும் இது தான் பிரதான இரண்டு கட்சிகளினதும் புரிந்துணர்வு உடன்படிக்கையாகும் என்றும் கூறியதோடு, தொடர்ந்தும் நாட்டு மக்களை முட்டாள்களாக மாற்றி, தமது குற்றங்களை அரங்கேற்றும் நடவடிக்கையைத் தடுக்க வேண்டுமென்றார்.
அதேபோல், உண்மைகளைக் கண்டறிய வேண்டும், குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்றால், அவை குறித்த உண்மைகளைத் தெரிவிக்க வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. உண்மைகளை மூடி மறைக்கவே வெட்கப்பட வேண்டும் என்றுத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கம், சட்டத்தையும் நீதியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட விரும்புகின்றது என்றால், சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் தாம் நியாயமான ஆட்சியாளர்களென வெளிப்படுத்த வேண்டுமென்றால், யுத்தக் குற்ற உண்மைகளைக் கண்டறிய, சர்வதேச நடுநிலையுடன் விசாரணைகளை நடத்திக்காட்ட வேண்டுமென, அவர் மீண்டும் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
4 hours ago