2025 நவம்பர் 24, திங்கட்கிழமை

திருகோணமலையில் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2025 நவம்பர் 24 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

திருகோணமலை மாநகர சபை அண்மைக்காலத்தில் மேற்கொண்ட பிழையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,இளைஞர்கள் குழு ஒன்றினால் சபைக்கு முன்பாக  திங்கட்கிழமை (24) அன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

ஊர்வலமாக பதாதைகளை ஏந்திய வண்ணம் வருகை தந்த சுமார் 50 இளைஞர்கள்,மாநகர சபை வாசலில் தமது கண்களை கருப்பு துணியால் கட்டியபடி இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளையோரின் கல்வி,வேலை வாய்ப்பு, திறன் விருத்தி சார்ந்து பல்வேறு சமூக செயற்பாடுகளை  "தளம்" நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனம் தற்போது மாநகர சபைக்கு உரித்தான கட்டிடத்தொகுதியில் இயங்கி வருகிறது.

 

இக்கட்டிடம் தொடர்பில் சபையானது முறையற்ற,சட்ட முரணான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இளையோரின் தொழில் முயற்சிகளை தடை செய்யும் ரீதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எதிர்ப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

 

ஏன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் என செய்தியாளர்கள் வினவிய போது அதற்கு பதிலளித்த இளைஞர்கள்

 

"மாநகரசபைக்குரித்தான இக்கட்டிடம் தொடர்பில் சபையினால் தற்போது திறந்த கேள்வி குத்தகை விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.அந்த விண்ணப்ப படிவங்களை பெற தளம் நிறுவனத்திற்கு சபையின் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.அத்துடன்  குத்தகை கேள்வி கோரப்பட்ட கட்டிட தொகுதிகளுக்கு முறையற்ற விதத்தில் குத்தகை தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

நகரின் அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் உரிமைசார் நம்பிக்கைகளை மீறி,கவனயீனமாக நிர்வாகம் செயல்படுகின்றது.

 

நகர வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் காரணமாக ஏற்படும் விபத்துகள் அதிகரித்து செல்கின்றன.இவற்றை சபை கட்டுப்படுத்த தவறியுள்ளது. திருகோணமலை பேருந்து நிலையம் போன்ற பொதுச் சொத்துக்களை பேணும் நடவடிக்கைகளில் சபை கவனமின்றி செயல்படுகின்றது"என்று கூறினர்

 

மாநகர சபைக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அமைதியான முறையில் இளைஞர்கள் சபை அலுவலகத்திற்கு சென்று மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஆணையாளரை சந்திக்க கோரிக்கை விடுத்தனர்.இருந்த போதிலும் அங்கிருந்த காவலாளி மாநகர சபை ஆணையாளர் அலுவலகத்தில் இல்லை என பொய் கூறியமையால் அவருடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்போது சற்று பதற்றமான நிலை அங்கு ஏற்பட்டது. 

 

இந்நிலையில் ஆணையாளர் இளைஞர்களின் பிரதிநிதிகள் மூவரை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் உப முதல்வர் மற்றும் சபையின் இரண்டு உறுப்பினர்களும் பங்கு கொண்டிருந்தனர். 

 

எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில், இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து  சபையில் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்படும் என கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஆணையாளர் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் தமது போராட்டத்தை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறினர்.

 

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் 26 ந் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வில் தாம் விசேட கவனம் செலுத்தி உரையாற்ற உள்ளதாக சபை உறுப்பினர் ஜெயசீலன் நாகரஜுன் இளைஞர்களுக்கு உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X