2025 ஜூலை 31, வியாழக்கிழமை

தர்மச் சக்கர விவகாரம்: மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது

Simrith   / 2025 ஜூலை 30 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தர்மச் சக்கரம் வரையப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஸாஹிமாவுக்கு புதன்கிழமை (30) நீதி கிடைத்தது.

ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து  தர்மசக்கர புகைப்படம் கொண்ட ஆடை (கப்டான்) அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மஹியங்கனை, ஹஸலகவை சேர்ந்த மஸாஹிமா கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்.

ஆனால் இவர்  கப்பலின் சுக்கான் கொண்ட புகைப்படம் வரையப்பட்ட ஆடையைத் தான் அணிந்தார். 

இந்நிலையில் பின்நாட்களில் விடுதலையான சகோதரி மஸாஹிமா தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாக கூறி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு புதன்கிழமை (30) வெளியானது.

நீதியரசர்களான யசந்த கொடேகொட, குமுதினி விக்கிரமசிங்க, ஷிரான் கொனேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வெளியிட்டது.

அதற்கமைய, அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகள்  மஸாஹிமா விவகாரத்தில் மீறப்பட்டுள்ளது என்பதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதுடன் அப்போதைய ஹஸலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி OIC ஜெ.பி ஷந்தன நிஷாந்த தனது சொந்த நிதியிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் நஷ்டஈட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வழக்கு செலவுகளை அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற குறித்த வழக்கில் சட்டத்தரணி பாத்திமா நுஷ்ராவின் வழிகாட்டலில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவமன்ன, சட்டத்தரணி ஹரினி ஜயவர்தன, சட்டத்தரணி இர்பானா இம்ரான் ஆகியோர் பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் ஆஜராகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .