2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தூங்கா நகரங்களை உருவாக்க வேண்டும்

Freelancer   / 2023 செப்டெம்பர் 29 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சுற்றுலா ஈர்பப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பதில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியில் 10 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்றும் இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் பேரை வரவழைக்க முடியும் என எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

வருடத்தின் இறுதி காலப்பகுதியிலேயே நாட்டுக்கு சுற்றுலாப் பிரயாணிகளில் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்த்திருக்கும் நிலையில், அடுத்த மாதத்தின் இடைப்பகுதியிலிருந்து அவர்களை வரவழைப்பதற்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக எல்ல, நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட சுற்றுலாப் பிரயாணிகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும், சில சட்டத்திட்டங்களை தளர்த்த வேண்டும் என்பதோடு, சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டில் செலவுகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தவறும் பட்சத்தில் நாட்டிற்கு வருமானம் கிட்டாது என்றும் வலியுறுத்தினார்.

அதேபோல், நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்துள்ளதெனவும், சிலர் செய்யும் தவறான செயற்பாடுகளினால் முழு நாட்டுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதனால் சுற்றுலாப் பயணிகளிடத்தில் அதிக தொகையை அறவிடும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, அவர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
 
இந்நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கு உள்நாட்டு கஞ்சா உற்பத்திக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாகவும், இரு வாரங்களுக்குள் அதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X