2025 ஜூலை 05, சனிக்கிழமை

’தேசியப் பாதுகாப்புக்கு உச்சக்கட்ட முன்னுரிமை’

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

தேசியப் பாதுகாப்புக்கு உச்சக்கட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை,  இன்று(3) ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் நாட்டு மக்களின் நலனுக்காக சேவையாற்றுவதே எம் அனைவரினதும் பொறுப்பு என்றும், ராஜபக்ஷக்கள் அணியும் குரக்கன் நிற சால்வயை தான் அணியவில்லை என்றும், ஆனாலும், அந்தக் குரக்கன் நிற சால்வையால் அடையாளப்படுத்தப்படுகின்ற தத்துவத்தையே தானும் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் இனவாத அரசியலை மக்கள் நிராகரித்திருப்பதாகவும் தெரிவித்ததுடன்,  தனது ஆட்சியில் ஒற்றையாட்சியையும் புத்தசாசனத்தையும் பாதுகாப்பதோடு, எந்தவொரு பிரஜைக்கும், தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தையும் பாதுகாக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.  

கடந்தக் காலத்தில், நாடாளுமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையிருந்தது என்றும் ஆனால், அந்த மரியாதை படிப்படியாகக் குறைந்துவிட்டதாகவும் தெரிவித்ததுடன், நாட்டு மக்களின் பிரச்சினைகளைக் கலந்துரையாடும் தேசியக் கொள்கைகளை விவாதிக்கும், சட்டவாக்கத்துறையின் பொறுப்பை உரிய விதத்தில் நிறைவேற்றும் முன்மாதிரியான இடமாக நாடாளுமன்றத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  

“அரசியல், பொருளாதார நெருக்கடிகள் காணப்படுகின்றன. நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்களாகின்றபோதிலும்,  நாட்டின் அபிவிருத்தி திருப்பதிகரமானதாக இல்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடைத்துள்ள பதவிகள் சிபாரிசுகள் அல்ல. அவை பொறுப்புகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேசியப் பாதுகாப்புக்கு, உச்சக்கட்ட முன்னுரிமை வழங்கப்படும். தேசியப் பாதுகாப்புத் தொடர்பில் திறமையான உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் பொறுப்புக்களை வழங்கியுள்ளதோடு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.

மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு அனைவரினதும் ஒத்துழைப்புத்  தேவைப்படுகிறது. விரைவில் குறைந்த வருமான பெறும் குடும்பங்களின் பிள்ளைகள்,  ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க உள்ளோம். இலங்கையை, அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியமைப்பதே,  எமது இலக்கு. ஊழல் மோசடிகள் தவிர்ப்பதற்கான விசேட வேலைத் திட்டமொன்று தேவைப்படுகின்றது. ஊழல் செய்பவர்களுக்கு பாரபட்சமின்றி சட்டநடவடிக்கை  எடுக்கப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .