2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையும் 'ஒழிக்கப்படலாம்'

Gavitha   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சபையாகவும் செயல்படுவதனூடாக அரசியலமைப்பு மாற்றியமைக்கப் படுவதோடு, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையும் ஒழிக்கப்படலாமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தமிழ்-சிங்கள புத்தாண்டு பிறப்பையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சபையாகவும் செயற்படுவதன் மூலம் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவுள்ளது. தற்பொழுது நடைமுறையிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவுள்ளன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் என்ற வகையில் நாங்கள் இது விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தின் விளைவாக ஏற்பட்ட அனர்த்தங்கள் அனைவரும் அறிந்தவையே. அவற்றை நிவர்த்திப்பதற்காகவே நாம், 19ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தோம்.

19ஆவது திருத்தத்தின்படி அரச சேவையின் சுயாதீனத்தையும், சுதந்திரத்தையும் பேணிப்பாதுகாப்பதற்காக அதில் பல்வேறு விதிமுறைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. பொறுப்பான பதவிகளை வகிப்போர் நாட்டின் நிர்வாகத்தை உரிய முறையில் மேற்கொள்கின்றார்களா என்பதை சரிவர கண்காணிக்கும் காரியம் மக்களிடம் ஒப்படைக்கப்படும்.

தகவல் அறியும் சட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அது நாடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டு சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் அந்த உரிமை பொது மக்களுக்கு கிடைக்கவுள்ளது.

அதன் பயனாக சகல விடயங்கள் குறித்தும் மக்கள் கேள்விகளை எழுப்பலாம். எந்த விடயத்தையும் மறைக்க முடியாது. இந்த தகவல் அறியும் சட்டத்தினூடாக பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதற்கு அமைவாக நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .