2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் ஆலய சூழல் விளையாட்டு திடல் அல்ல;நீதிபதி இளஞ்செழியன் சாட்சி

Freelancer   / 2024 ஏப்ரல் 26 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

நல்லூர் ஆலய சூழல், துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியில் தெரிவித்தார்.  

நீதிபதி இளஞ்செழியன் மீது கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி ஆலய தெற்கு வாசல் கோபுரத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. 

நீதிபதி இளஞ்செழியன்    புதன்கிழமை (24) நீதி மன்றில் தோன்றி, தனது சாட்சியங்களை பதிவு செய்தார். 

சம்பவ தினத்தன்று மேல் நீதிமன்றில் இருந்து எனது காரில்  யாழ். - கண்டி வீதி வழியாக சென்று , கோவில் வீதி வழியாக எனது உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி பயணித்தேன். 

காரினை எனது சாரதி ஓட்டினார். அவருக்கு அருகில் எனது ஒரு மெய்ப்பாதுகாவலர் அமர்ந்திருந்தார். நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தேன். 

எனது கார் சாரதியின் மோட்டார் சைக்கிளை எனது மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் செலுத்தி வந்தார். 

நல்லூர் ஆலய பின் வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமையால் , மோட்டார் சைக்கிளில் முன்னே சென்ற எனது மெய்ப்பாதுகாவலர் வீதியின் போக்குவரத்தினை சீர் செய்து எனது காரினை சந்தியால் பருத்தித்துறை வீதி பக்கம் அனுப்பினார். 

அவ்வேளை காரின் பின் புறமாக இருந்த நான் காரின் கண்ணாடி வழியாக பின் புறம் அவதானித்த போது , சிவில் உடை தரித்த நபர் ஒருவர் வீதியில் போக்குவரத்தினை சீர் செய்து கொண்டிருந்த எனது மெய்ப்பாதுகாவலரின் இடுப்பு பட்டியில் இருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்டார். 

அதனை அவதானித்து காரினை நிறுத்துமாறு சத்தமிட்டேன். மெய்ப்பாதுகாவலர் சிவில் உடை தரித்தவரிடம் இருந்து தனது துப்பாக்கியை பறிக்க மல்லுக்கட்டினார்.,

நான் காரினை விட்டு இறங்கி துப்பாக்கியை கீழே போடுமாறு கத்தினேன். எனக்கும் அவர்களுக்கும் இடையில் 12 - 15 அடி இடைவெளி இருந்தது. துப்பாக்கியை பறித்தவர்  துப்பாக்கியை லோர்ட் செய்தார். சிறிது நேரத்தில் " மகே அம்மே " என கத்தியவாறு எனது மெய்ப்பாதுகாவலர் வயிற்றை பிடித்தவாறு சரிந்து விழுந்தார். 

அடுத்து துப்பாக்கியுடன் நின்றவர் என்னை நோக்கி சுட்டார் உடனே என்னுடன் காரில் பயணித்த மற்றைய மெய்ப்பாதுகாவலர் , என்னை காரின் இடது புறம் தள்ளி விட்டு கீழே படுத்துக்கொண்டார்.அவ்வேளை அவரது இடது தோள் புறத்தில் துப்பாக்கி சூடு பட்டது.  பதிலுக்கு எனது மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி சூடு நடத்தினர். 

இருவரது துப்பாக்கி ரவைகளை தீர்ந்த நிலையில் , சிவில் உடை தரித்தவர் எனது காரின் எதிர்புறமாக பருத்தித்துறை வீதி வழியாக ஓடி தப்பினார். 

துப்பாக்கி சூடு நடத்தியவரை சுமார் 12 நிமிடங்கள் நேரில் பார்த்தேன் என்பதால் , எதிரி கூண்டில் நிற்கும் எதிரி தான் துப்பாக்கி சூட்டினை நடாத்தினார் என நன்கு தெரியும் என கூறினார். 

குறுக்கு விசாரணையின் போது , எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , " முச்சக்கர வண்டி சாரதிக்கு இடையிலான முரண்பாட்டின் போது , உங்கள் மெய்ப்பாதுகாவலர் தலையீடு செய்தமையால் , ஏற்பட்ட முரணாலையே துப்பாக்கி சூடு இடம்பெற்றது, உங்களை கொல்லவேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை"  என குறிப்பிட்டதை , நீதிபதி மறுதலித்து " நல்லூர் ஆலய சூழல் சுட்டு விளையாடும் திடல் அல்ல என தெரிவித்தார். 

நீதிபதியின் சாட்சியம் நிறைவுற்றதை அடுத்து , நீதிபதி பலத்த பாதுகாப்புடன் , நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார். 

அதேவேளை , சம்பவ தினத்தன்று , நீதிபதியின் மற்றுமொரு மெய்ப்பாதுகாவலராக கடமைக்கு சென்று , துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது சாட்சியத்தின் போது , துப்பாக்கி சூட்டில் எனது நண்பர் படுகாயமடைந்த நிலையில் , நான் எனது நண்பரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. அதனால் சூழலை என்னால் முழுமையாக அவதானிக்க முடியவில்லை. என கண்ணீருடன் தனது சாட்சியத்தை பதிவு செய்தார். 

குறித்த வழக்கு விசாரணைகள்   வெள்ளிக்கிழமை (26) வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X