2025 மே 21, புதன்கிழமை

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அஞ்சேன்: ரவி

Kanagaraj   / 2015 நவம்பர் 26 , மு.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவரவிருப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம்கொடுப்பதற்கு நான் தயார், அதனைக் கண்டு அஞ்சமாட்டேன் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், சபாநாயகர் உட்பட 225 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், வெறுமனே 10 உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் பிரேரணையால் எதனையும் செய்துவிடமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில், மொத்தத் தேசிய  உற்பத்தியில் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் பிழையான புள்ளிவிவரங்களைச் சமர்ப்பித்து, மக்களையும் நாட்டையும் நிதியமைச்சர் ஏமாற்றியுள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவிருப்பதாக அறிவித்தனர்.

வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும், எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவிருப்பதாக அக்கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுதொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,
2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம், ஒரு வெற்றிகரமான திட்டமாகும். அத்திட்டத்தின் ஊடாக மக்களுக்குப் பல சலுகைகள்  வழங்கப்பட்டுள்ளன.

வரவு-செலவுத் திட்டம் வெற்றியளித்துள்ளது. சகலருக்கும் வழங்கப்பட்டுள்ள சலுகைகளைக் கண்டே, எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர திட்டம் தீட்டியுள்ளனர். அதற்கு முகம்கொடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மலையக மக்களுக்கான சம்பள பிரச்சினை வரவு- செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.  மலையக மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னுரிமை அளித்தே, சம்பளப் பிரச்சினை தொடர்பிலான விடயம் இந்த வரவு- செலவுத்திட்டத்தில் உள்;வாங்கப்படவில்லை என்றார்.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் ஊடாக பாரிய முதலீடொன்றை பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு ஓர் இடத்திலிருந்து உரிய வகையிலான சேவையினை வழங்க முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X