2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘நிலத்தின் மீதான அதிகாரம் அரசியல் தீர்வின் அத்திபாரம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன் 

“நிலத்தைப் பாதுகாக்காவிட்டால் அரசியல் தீர்வு என்பது ஒரு மாயையாகும். நிலம் இல்லாத பிரதேசத்தில் ஆட்சி செய்யமுடியாது. மக்கள் இல்லாத ஊரில் அரசாங்கம் இருக்கமுடியாது. நிலமும் ஆட்புலமும் ஒரு தேசத்துக்கு அத்தியாவசியமானது” எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன், “நிலத்தின் மீதான அதிகாரம்தான் அரசியல் தீர்வின் அத்திபாரம்” என்றார்.

“நிலம், பறிபோய்க்கொண்டிருக்கின்றது, மக்களும் நாட்டை விட்டுப் போய்க்கொண்டிருக்கின்றார்கள். அரைவாசி மக்கள் போய்விட்டார்கள். நிலம் பறிபோகும் வேகத்தை விடவும் மக்கள் வெளியேறிப்போகும் வேகம் கூடுதலாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் “நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும்” என்ற சிறப்புப் பேருரை, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் சிவன் கோவில் வளாகத்தில், சனிக்கிழமை (20) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு  சிறப்புப் பேருரை ஆற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,  

“அதிகாரப் பகிர்வு குறித்து எங்கள் நாட்டில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது என்றால் அடிப்படையிலேயே நில அதிகாரங்களை குறித்ததாகத்தான் அது இருந்திருக்கின்றது. மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவக் குழு இரண்டு பிரேரணையை முன்வைத்தது” என்று தெரிவித்த சுமந்திரன் எம்.பி, “அந்தப் பிரதிநிதித்துவக் குழுவுக்கு ஆலோசனை கொடுக்கின்ற நிபுணர் குழு, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தலைமையிலான சர்வகட்சிக் குழு உள்ளிட்டவை தயாரித்த அறிக்கைகளில், காணி அதிகாரங்கள் மாகாணத்துக்குக் கொடுக்கப்படவேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. 

“அதில், காணி மட்டுமல்ல, தண்ணீரைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களுக்கு மகாவலித் தண்ணீரைக் கொண்டுவருகின்றோம் என்ற தோரணையில், குடியேற்றங்களை அரசாங்கம் இன்று செய்துகொண்டிருக்கின்றது. எனினும், 2014ஆம் ஆண்டளவில் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கைகளில், நிலமும் நீரும் என்ற தலையங்கத்தின் கீழ் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.  

“நிபுணர் குழு அறிக்கையில், தண்ணீர் சம்மந்தமாகக் குறிப்பிடுகையில், மத்திய அரசாங்கத்துக்கு பங்கு இருந்தாலும், மாகாண அரசாங்கத்துக்கு உரித்து இருக்கவேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ள அவர், “காணி என்கின்ற விடயத்தில், மகாவலித் திட்டம் வந்தபோது என்ன விதமான குடியேற்றங்கள் இடம்பெற்றன. அந்தப் புள்ளிவிவரங்களில் 98 , 99 சதவீதமான குடியேற்றக் காணிகள், பெரும்பான்மை சமூகத்தினரிடத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன” என்றார். 

“தேசிய இனப்பரம்பலுக்கு ஒத்தவாறுதான் இந்தக் காணிகள் கொடுக்கப்படவேண்டும் என்று மகாவலி சட்டத்திலேயே இருக்கின்றது. அதனையும் மீறி இப்படியாக நடைபெற்றுள்ளது” என்றும் இதன்போது அவர் தெரிவித்தார்.  

“இதில் இன்னுமொரு விடயம் உள்ளது. ஏதாவது ஒரு பிரதேசத்தில் தேசிய இனப்பரம்பலைப் பேணமுடியாது போனால், குறைந்தளவான எண்ணிக்கையாளர்களுக்கு, மற்றப் பிரதேசங்களில், மற்ற வலயங்களில் அதற்கு ஈடுசெய்கின்ற வகையாகக் கொடுக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.  

“அந்தச் சட்டத்திலுள்ள பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால், இனிவருகின்ற வலயங்கள் எல்லாவற்றிலும் தமிழ் மக்களுக்குத்தான் காணி கொடுக்கவேண்டும். ஆனால், இன்றுவரை அது கடைப்பிடிக்கப்படவில்லை. கடந்த ஓகஸ்ட் மாதத்திலும்கூட அது மீறப்பட்டுள்ளது” என்றார். 

“முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தி வலயம் ஊடாக குடியிருப்புக் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகையால்தான், இனப்பரம்பலை மாற்றுகின்ற விதத்தில் இருக்கக்கூடாது என்கின்ற யோசனைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத்தான் இருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் இவை ஒன்றும் அமுலுக்கு வரவில்லை. அமுலுக்கு வராத காரணத்தால் நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கின்றன” என்றார்.  

“இப்போது, புதிய அரசமைப்பு வரைபொன்று, இன்று அல்லது நாளை வருவதற்கு இருக்கின்றது. அது வந்தால், அதில் காணி அதிகாரத்தைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பது பகிரங்கமாகத் தெரியவரும்” என்றார்.  

“ஆனால், அது ஏற்கெனவே தெரியவந்த விடயமாகும். அதில் செய்யப்பட்டுள்ள வரைபுகூட கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையை ஒத்ததானது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இடைக்கால அறிக்கையில், காணி, தண்ணீர் சம்பந்தமான அதிகாரங்கள் மாகாண சபைக்கு இருக்கவேண்டிய அதிகாரம் பற்றித் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது” என்றும் இதன்போது தெரிவித்த அவர், “அதில் அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான முன்னீர்ப்பு எப்படியாக இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிக்கும். இதனையும் படித்து, டட்லி - செல்வா ஒப்பந்தத்தையும் படித்தால், இது எங்கேயோ பார்த்தமாதிரி ஒரு நினைவு வரும்” என்றார்.  

“இதில், காணி சம்மந்தமாகக் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் திருப்திகரமாக இல்லை என்ற தீர்மானத்துக்கு நாங்கள் வந்திருக்கின்றோம். இதில் பல ஓட்டைகள் இருக்கின்றன. வனப்பாதுகாப்பு, வனவிலங்குப் பாதுகாப்பு, தொல்பொருள், மகாவலி என்று அது ஒருபக்கத்தால் ஓட்டைகள் இருக்கின்றன. இறுதி வரைவில் இந்தத் தீர்வைப் பலப்படுத்த வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம்” என்றும் இதன்போது அவர் தெரிவித்தார்.  

“அதில், என்ன இருக்கின்றது என்று பார்த்தால் மாகாணங்களின் அனுமதி இல்லாமல் காணி அதிகாரங்கள் உபயோகப்படுத்த முடியாது என்பது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால் காணி அதிகாரம் தொடர்பிலான இணக்கப்பாடு இன்றுவரையிலும் எழுத்துமூலமாகக் கடதாசியில் இருக்கின்றது. நிலத்தில் இல்லை. இதுதான் பிரச்சினையாகும்.  

ஆனப்படியால்தான், நாங்கள் தலைகீழாக நின்றாகிலும் எழுத்தை நியாயமாக்கவேண்டுமென, இந்த முறை கடுமையாக உழைக்கின்றோம்” என்றார். 

நிலத்தைப் பாதுகாக்காவிட்டால் அரசியல் தீர்வு என்பது ஒரு மாயையாகும். நிலம் இல்லாத பிரதேசத்தில் ஆட்சி செய்யமுடியாது. மக்கள் இல்லாத ஊரில் அரசாங்கம் இருக்கமுடியாது. நிலமும் ஆட்புலமும் ஒரு தேசத்துக்கு அத்தியாவசியமானது. நிலம் பறிபோய்க்கொண்டிருக்கின்றது. மக்களும் நாட்டை விட்டுப்போய்க்கொண்டிருக்கின்றார்கள். அரைவாசி மக்கள் போய்விட்டார்கள். நிலம் பறிபோகும் வேகத்தை விட மக்கள் வெளியேறிப்போகும் வேகம் கூடுதலாக இருக்கும்” என்றார்.  

“நிலமும் இல்லை, மக்களும் இல்லை என்று சொன்னால் தேசம் இல்லை என்கின்ற நிலை வந்துவிடும். அது ஏற்படாமல் தடுப்பதாக இருந்தால் இந்தவேளையிலாவது நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டும்” என்று தெரிவித்த அவர், “அதனால்தான் பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் நாங்கள் இன்னமும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்” என்றும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .