2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கருப்பழகி ‘மாடல் அழகி’ தன்னுயிரை மாய்த்தார்

Editorial   / 2025 ஜூலை 14 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருப்பழகி பிரிவில் பட்டம் வென்ற புதுவை மாடல் அழகி, காதல் திருமணம் செய்த ஓராண்டில் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி காரமணிக்குப்பம் மாரியம்மன் நகரை சேர்ந்தவர் காந்தி (வயது 57). இவரது மகள் சங்கரபிரியா என்கிற சான்ரேச்சல் (வயது 26). இவர் மாடலிங் தொழில் செய்து வந்தார். இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற அழகி போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்தவர். அழகிப்போட்டியில் பல்வேறு விருதுகளை வென்ற சான்ரேச்சல், புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு 'மாடலிங்' (பேஷன் ஷோ) பயிற்சி வகுப்புகளை எடுத்து வந்தார்.

இந்தநிலையில் அவர், புதுவை 100 அடி ரோடு ஜான்சி நகரை சேர்ந்த சத்யா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.மாடலிலிங் பயிற்சி வகுப்பு நடத்திடவும், அவர் காதல் திருமணம் செய்து கொண்டபோதும் செலவுக்காக பலரிடம் லட்ச்சக்கணக்கில் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இரவு கணவன் வீட்டில் இருந்த சான்ரேச்சல் தனது தந்தை காந்திக்கு போன் செய்தார். அவரிடம், தான் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை மற்றும் ரத்த அழுத்த (பி.பி.) மாத்திரைகளை தின்று விட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காந்தி, மகள் வீட்டுக்கு விரைந்து வந்தார். அங்கு மயங்கி கிடந்த மகள் சான்ரேச்சலை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சான்ரேச்சல் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து உருளையன்பேட்டை பொலிஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.சான்ரேச்சல் தற்கொலைக்கு, பேஷன் ஷோ நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமா? என விசாரித்து வருகிறார். மேலும் அவருக்கு திருமணம் ஆகி ஓராண்டே ஆவதால், தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது.

பிரபல மாடல் அழகி சான்ரேச்சல் தற்கொலைக்கு முன்பு அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. கணவர், தந்தை மற்றும் மாமியார் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதங்களில், 'நான் குடும்பத்திற்கு தெரியாமல் அதிக அளவில் கடன் வாங்கினேன். அந்த கடனை என்னால் திரும்ப செலுத்த முடியவில்லை. உறவினர்கள் உதவுவார்கள் என்று எண்ணினேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. எனவே தற்கொலைக்கு செய்துகொள்கிறேன். என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள். எனது சாவுக்கு யாரும் காரணமில்லை.' என குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட சான்ரேச்சல் கடன் தொல்லையால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் கூறுகின்றனர். இந்த வழக்கில் தொடர் விசாரணை நடந்து வருகிறது. சான்ரேச்சல் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .